செய்திகள்

வடக்கை மீண்டும் கட்டியெழுப்ப பங்காளிகளாகுங்கள்: சி. வி.கே. சிவஞானம்

யுத்தத்தினால் பெரும் அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து துறை சார்ந்தவர்களும் பங்காளிகளாக மாற வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி. வி.கே. சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த யாழ்ப்பாண சமூகம் என்பது மீண்டும் மீண்டும் அழிவுக்குப் பின்னும் அழிவுக்கு ஊடாகவும் நிமிர்ந்து நிற்கக் கூடியதும் மீண்டும் எழக்கூடியதுமான மக்கள் குழாமைக் கொண்டது. இது வடக்கு மாகாணத்திற்கு மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களுக்கும் பொருந்தும். மேலும் வடக்கு மாகாணத்திற்கு பொருத்தமான பொருளியல், தொழில்வாய்ப்பு , உழைப்பு சார்ந்த அபிவிருத்தித் திட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். இதுவே எங்களது இலக்கும் கூட எனினும் வடக்கு மாகாண சபையும் அதன் உறுப்பினர்கள் , அமைச்சர்களும் முழுமையாக சாதித்து விடுவார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கக் கூடாது. குறிப்பாக பல துறை சார்ந்தவர்கள் இணைந்து செயற்படுத்தப்பட வேண்டும்.

மற்றும் தொழில்துறை மற்றும் பொறியியல் சார்ந்த நிபுணர்கள் எங்களோடு இணைந்து கொள்ள வேண்டும். பல இக்கட்டுக்களுக்கு ஊடாக நாங்கள் முன்னேறிச் செல்ல முயலுகின்றோம். எங்களோடு அனைத்துதுறை சார்ந்தவர்களும் பங்காளிகளாக வேண்டும். எமது பகுதி யுத்தகாலத்திற்கு முன்பாக மிகவும் சிறந்த விவசாயம் , கடற்றொழில் சார் உற்பத்திகளில் முன்னேறி இந்த நாட்டில் பெருமைசார்ந்த ஒரு இனமாக இருந்தது. எனினும் யுத்தத்தால் மாறுபட்டுவிட்டது. எனவே நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அதற்காக தற்போது வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு எமது மக்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். எனவே அதற்கு நீங்களும் நாங்களும் இணைந்து செய்ய வேண்டும் அதற்காக நாங்கள் உங்களை அழைக்கின்றோம்”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.