செய்திகள்

வடபகுதி மீனவர் பிரச்சினை குறித்து வடக்கு முதல்வருடன் ஜனாதிபதி பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும், வடமாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களின் போது, ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் ஜோசெப் மைக்கல் பெரேரா, வடமாகாண ஆளுநர் பாளிகார, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, வெளிவிவகாரச் செயலாளர், உட்பட மற்றும் முக்கிய அதிகாரிகளும் பேச்சுக்களில் கலந்துகொண்டிருந்தனர்.

தன்னுடைய இந்திய விஜயத்தில் மீனவர் பிரச்சினை குறித்தும் முக்கியமாக இந்தியப் பிரதமருடன் பேச்சுக்களை நடத்தவிருப்பதால் அது தொடர்பான விபரங்களையே ஜனாதிபதி கேட்டறிந்தகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டிவரும் மீளவர்களால் வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கியமாக இங்கு ஆராயப்பட்டது.

வட மாகாண சபையில் இனப்படுகொலை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு தினங்களில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அது குறித்து எதுவும் பேசப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.