செய்திகள்

வடமாகாணத்தில் சகல குற்றங்களையும் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு மாத கால அவகாசம்: நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றுப் புதன்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்து வடமாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நேற்று அழைத்துப் பேசிய நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.அவர் தனது உத்தரவில் மேலும் தெரிவித்திருத்திருப்பதாவது,
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அத்துமீறிச் செல்லும் வாள்வெட்டுக்கள்,கோஷ்டி மோதல்கள்,வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுக்குத் தொந்தரவு செய்தல்,வீதி ரவுடித்தனம் போன்ற குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலை மாணவிகளுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.மாலை 6 மணிக்குப் பின்னர் நடைபெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அவற்றின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் மதுபானசாலை உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுக் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களான பான்பராக்,மாவா,மதன மோகம் உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை கடுமையான முறையில் கண்காணிக்கப்பட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுவிடங்களில் தொந்தரவு செய்வோரைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் அலைந்து திரிபவர்கள்,தொல்லை கொடுப்பவர்கள்,பகிடி வதைகளில் ஈடுபடுபவர்கள் போன்றோர் தண்டணைக் கோவைச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

சகல பாடசாலைகள் முன்பாகவும் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டு சுற்றாடல் கண்காணிக்கப்பட வேண்டும்.இவற்றைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.

இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் குற்றங்கள் அனைத்தும் ஒரு மாத காலப் பகுதிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் நீதவான் தனது உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்.நகர் நிருபர்-