செய்திகள்

வடமாகாண ஆளுநராக பலிஹக்கார நியமனம்: கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றார் மைத்திரி

வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தைச் சாராத சிவிலியன் ஒருவர் வடமாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது கோரிக்கையை இதன் மூலம் புதிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பலிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். வடக்கின்  ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பலிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலகத்துக்கான பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதங்கள் ஐ நாவில் நடைபெற்ற போது அரச தரப்பில் பங்கேற்ற குழுவிலும் இருந்துள்ளார்.

இலங்கையில் போருக்கு பின்னரான காலப்பகுதியில், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில்’ ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.