செய்திகள்

வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளரை மாற்ற மைத்திரி இணக்கம்: கூட்டமைப்புக்கு உறுதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று சந்தித்துப்பேசிய போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன், மாவைசேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அரச தரப்பில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ராஜித சேனாரட்ண ஆகியோரும் கலந்துகொண்டனர். சந்திப்பு ஆரம்பமானபோது, வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்றுத்தந்தமைக்காக மைத்திரிபா முதலில் தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், அதன் மூலமாகவே வடமாகாணம் சிறப்பாகச் செயற்பட முதுடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார்கள்.

இதற்குப் பதிலளித்த ஜனாதபதி, இந்தப் பதவிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அந்த மாற்றங்களைச் செய்யும்போது, கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தியே புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.