செய்திகள்

வடமாகாண சபையின் ‘இனப்படுகொலை’ தீர்மானம்: ஜனாதிபதி மைத்திரி ஏமாற்றம்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி.யினருடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே இது தொடர்பில் தன்னுடைய ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தியதாக ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் சந்திரகுமார் எம்.பி. ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இதுகுறித்து தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணசபையினால், இனப்படுகொலை குறித்து தீர்மானம், நிறைவேற்றப்பட்டது, மாகாணசபையின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக இருந்தது எனத் தெரிவித்த ஈ.பி.டி.பி. பிரதிநிதி ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

“நல்லிணக்க முயற்சிகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போது, வடக்கு மாகாண சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.” என்றும் ஜனாதிபதி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண சபையின் இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை ஆதரித்து ஈ.பி.டி.பி.யும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.