செய்திகள்

வடமாகாண சபையின் திடீர் இடமாற்றமும், ரத்தும்: குழப்பத்தில் மாகாண சபை

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோருக்கு இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவு ஆளுநராலேயே வழங்கப்பட்டு அவராலேயே திடீரென ரத்துச் செய்யப்பட்டிருப்பது மாகாண சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆளுநர் கொழும்பு வந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த பின்னரே இடமாற்றங்களை ரத்துச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது.

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும், மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.வரதீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இன்று முதலாம் திகதி நடைமுறைக்கு வரும்வகையில் இடமாறம் செய்யப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆளுநரே மேற்படி இடமாற்றங்களை தற்போது ரத்துச்செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.