செய்திகள்

வடமாகாண சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! வலியுறுத்தி திருமா ஆர்ப்பாட்டம்

வட மாகாண சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி பிப்ரவரி 16-ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“ஈழத்தில் நடத்தப்பட்டது இனப்படுகொலைதான். அதனை ஐ.நா. சபை விசாரித்து சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக  ஐ.நா. அறிக்கையை தள்ளிப்போட இலங்கை முயற்சித்து வருகிறது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களசமரவீர இதற்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும் என்றும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அறிக்கையை இலங்கை அரசின் விசாரணை அமைப்பிடம் கொடுக்கலாம் என மைத்ரிபால சிறீசேனா அரசு கூறி வருகிறது. இதனை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

சீனாவின் செல்வாக்கைக் குறைத்தால் போதும் என்ற சுயநல நோக்கில் இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்கா செய்யும் இந்தச் சதிóக்கு இந்தியா துணை போகக் கூடாது. தமிழக மீனவர்களின் படகுகள் விடுப்பு போன்ற பசப்புகளுக்கு ஏமாறாமல் ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். இந்தியா வரும் சிறீசேனாவிடம் இதனை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அறிக்கையை இந்த மார்ச் மாதத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியா உறுதிபடக் கூற வேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (பிப். 16) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.