செய்திகள்

வடமாகாண சபை தீர்வு யோசனைகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்

வடமாகாண சபையால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது. வட-கிழக்கு மாகாணங்களை இணைத்து தனிநாடொன்று உருவாக்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண சபையால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டித் தீர்வினால் நாடு பிளவுபடும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் (மகிந்த அணி) தலைவராகச் செயற்படும் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். விமல் வீரவன்ச போன்ற சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது அரசியலுக்கான முதலீடாகக் கொண்டுள்ளவர்களும், வடமாகாண சபையின் தீர்வு யோசனைளை தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்த முற்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.

வடமாகாண சபையால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகள் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதேவேளையில், சிங்கள கடும்போக்காளர்களின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவர்களுடைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. தமிழர்கள் தமக்கான நியாயமான ஒரு தீர்வைக் கோரும் போது, அது தனிநாட்டுக்கான கோரிக்கையாக அல்லது நாட்டைப் பிரிப்பதற்கான திட்டமாகப் பார்க்கப்படுவது என்பது வழமையானதாகிவிட்டது. அதேபோன்ற ஒரு பார்வையுடன்தான் சிங்களக் கடும்போக்காளர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை இப்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார்கள். நடைபெறப்போகும் மேதினப் பேரணியில் மகிந்த அணியினர் தமது செல்வாக்கை உயர்த்திக்கெள்வதற்கு இதனைப் பயன்படுத்துவார்கள் என்பது எதிர்பார்க்கப்படக்கூடியதுதான்.

வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு நிர்வாக அலகும், இலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்னொரு அலகும் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கில் முஸ்லிம் வாழும் பிரதேசங்கள் மற்றும் மலையகத் தமிழர் வாழும் பிரதேசங்கள் தனியான சுதந்திர நிர்வாகப் பிரிவுகளாக உருவாக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு ஒன்றே இந்த யோசனைகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றது. இந்த தீர்வு யோசனைகளை ஆராயும் போது, இரண்டு விடயங்களை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஒன்று: இந்தியாவில் உள்ளதைப் போன்று மொழிவாரி மாநிலம் இங்கும் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இந்த யோசனை வலியுறுத்துகின்றது. இரண்டு: 1915 ஆம் ஆண்டளவில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு யோசனையை பின்பற்றியதாகவே இந்தத் திட்டமும் உள்ளது.

வடமாகாண சபையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பாக தெளிவான குறிப்பொன்றை முன்வைத்திருக்கின்றார். அவர் சொன்னது இதுதான்:

“வட­மா­காண சபையின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாங்கள் அர­சாங்­கத்தால் தயா­ரிக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது அர­சியல் தீர்­வுக்­கான முன்­மொ­ழி­வு­களோ பின்­வரும் கொள்கை முன்­மொ­ழி­வு­களை கருத்திற் கொள்­ளல்­வேண்டும் என முடி­வு­செய்­கின்றோம். இந்­தி­யாவில் மாநி­லங்கள் மொழி ரீதி­யாகப் பிரிக்­கப்­பட்­டி­ருப்­பதைப் போன்று இலங்­கை­யா­னது அடிப்­ப­டையில் இரண்டு பரந்த மாநி­லங்­க­ளாக, அதா­வது பெரும்­பான்­மை­யாகத் தமிழ்ப் பேசும் பிர­தே­சத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் மற்றும் பெரும்­பான்­மை­யாகச் சிங்­களம் பேசும் மக்­களைக் கொண்ட ஏனைய ஏழு மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படல் வேண்டும்.

இவ்­விரு பரந்த மொழி ரீதி­யான மாநி­லங்­க­ளிலும் தமிழ்ப் பேசும் முஸ்­லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அல­கா­கவும் தமிழ்ப் பேசும் மலை­யகத் தமி­ழர்கள் நாட்டின் ஏனைய பகு­தியில் ஓர் அல­கா­கவும் இனங்­கா­ணப்­பட்டு, அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டல்­வேண்டும். சிங்­களம் பேசு­வேரைக் கொண்ட மாநி­ல­மா­னது அத­னுள்ளே பிரிக்­கப்­படல் வேண்­டுமா என்ற கேள்­வி­யா­னது சிங்­கள மக்­களால் தீர்­மா­னிக்­கப்­படல் வேண்டும். பெரிய நக­ருக்­கு­ரிய கொழும்புப் பகு­தி­யா­னது தனி­யா­னதோர் நிர்­வா­கத்தைக் கொண்டு நாட்டின் தலை­நகர் அல­காக அங்­கீ­க­ரிக்­கப்­படல் வேண்டும்.”

வடமாகாண சபை முன்வைத்திருக்கும் யோசனையின் பிரதான அம்சம் இதுதான். இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து மற்றும் பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டி யோசனை என்பவற்றின் அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே இந்த யோசனை அமைந்திருக்கின்றது. இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மொழி அடிப்படையிலேயே நிர்வாக அலகுகள் உருவாக்கப்பட்டன. இது நிர்வாக வசதிக்காகவும், வரலாற்று ரீதியாகவுள்ள அம்சங்ளைப் பேணுவதற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடு. இது இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தியிருக்கின்றதே தவிர அதனைப் பலவீனப்படுத்தவில்லை. அதிகாரங்களைப் பரவலாக்குவதன்மூலமாகத்தான் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதை சிங்களக் கடும் போக்காளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்களா அல்லது தமது அரசியலுக்காக அதனைப் பயன்படுத்த முற்படுகின்றார்களா என்பதுதான் இன்று எழும் கேள்வி!

இலங்கையில் சமஷ்டி என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தவரே பண்டாரநாயக்கதான். வடக்கு- கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதையும் ஏற்றுக்கொண்டிருந்தார் எனக் கருதலாம். அவர் முன்வைத்த சமஷ்டி யோனையில் இலங்கை மூன்று அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று : வடக்கு கிழக்கு. இரண்டு கண்டியைத் தலைநகராகக் கொண்ட மத்திய மலையகப் பகுதி, மூன்று கரையோர சிங்களப் பகுதி. இந்த நிலைப்பாட்டிலிருந்து பண்டாரநாயக்க பின்னர் விலகிச் செல்வதற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், வரலாற்றின் தொடர்ச்சியாகவே இந்த யோசனை அவரால் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது. வடமாகாண சபை தற்போது முன்வைத்திருக்கும் யோசனைகளிலும் இதன் அம்சங்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். வெறும் அரசியலுக்காக இதனை விமர்சிப்பதையோ எதிர்ப்பதையோ விட்டுவிட்டு ஆக்கபூர்வமான முறையில் சிங்கள சமூகம் இதனைப் பரிசீலிக்க முன்வரும் நிலையில்தான் உண்மையான சமாதானத்தை இங்கு ஏற்படுத்த முடியும்.