செய்திகள்

வடமாகாண மக்களின் உள்ளங்களை தன் பணிகளால் கவர்ந்துகொண்ட வங்கியாளர் மாணிக்கசிங்கி

இலங்கை வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக வடமாகாணத்தில் பணியாற்றிவந்த நடராஜா மாணிக்க சிங்கி தனது முப்பத்தெட்டு வருடகால வங்கிச் சேவையை நிறைவுசெய்து கடந்த வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். அமைதியும் இனிமையோடு பழகும் சுபாவமும் கடின உழைப்பும் நிறைந்த ஒருவர் மாணிக்கசிங்கி. தன்னிடம் ஒப்படைக்கப்படும், பொறுப்புக்களை நேர்த்தியாக நிறைவு செய்வதில் வல்லவர் மட்டுமல்ல நாடிவருவோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அனுசணையாகச் செயற்படுபவருங்கூட. இதனாலேயே மாணிக்கசிங்கி வெற்றிகரமான வங்கியாளராகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.

கனிஷ்ட எழுதுவினைஞர்/ உதவிக் காசாளராக 1978 ஆம் ஆண்டில் இலங்கை வங்கியில் இணைந்து வங்கிப்பணியை ஆரம்பித்தார் மாணிக்கசிங்கி. அவரது அயராத உழைப்பும் விடா முயற்சியும் உதவிப் பொதுமுகாமையாளர் பதவிவரை அவரை உயர்த்தியது என்பது மிகையல்ல. வங்கியாளர் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்த மாணிக்கசிங்கி பின்னர் லண்டன் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் சந்தைப்படுத்தலில் Post Graduate Diploma பட்டத்தினையும் Chartered Marketer  விருதினையும் பெற்றவர்.

வங்கிப்பணியில் படிப்படியாக உயர்ந்து இலங்கை வங்கியின் சந்தைப்படுத்தல் பகுதியில் ஏழு வருடங்கள் முகாமையாளராகப் பணியாற்றினார். வடக்கு, மலையகம், கொழும்பு தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சேவையாற்றி கடந்த 5 1/2 வருடகாலமாக தனது சொந்தப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் பிரதேச முகாமையாளராகவும் வடமாகாண செயற்பாட்டு முகாமையாளராகவும் உதவிப் பொது முகாமையாளராகவும் பல பதவி நிலைகளில் பணியாற்றி வந்தார். வடமாகாணத்தில் இவரது முயற்சியால் வங்கிக்கிளைகள் அதிகரிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. வட்டுக்கோட்டையிலும் இவர் தம்முயற்சியால் கிளையொன்று நிறுவப்பெற்று சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜா தம்பதிகளின் மூத்த புதல்வரான மாணிக்கசிங்கி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நீண்டகால உறுப்பினராகச் செயற்பட்டு வருபவர். சமூகப் பணிகளில் அக்கறை கொண்ட இவர், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க உறுப்பினராகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக்கிளை உறுப்பினராகவும் செயற்பட்டு சமூகப் பணியாற்றி வருபவர். தன்னை முன்னிலைப்படுத்தாது, புகழ்விரும்பாது பணிகளில் முதுகெலும்பாய் செயற்படுகின்ற நற்பண்பு மிக்கவர்தான் மாணிக்கசிங்கி.

தொழில்சார் வங்கியாளர் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் பின்னர் பொருளாளராகவும் செயலாற்றி வங்கியாளர் கழகத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர். இவர் வடமாகாண மக்களின் உள்ளங்களை தன்பணிகளால் கவர்ந்துகொண்டவர். விவசாயிகள், சுயதொழிலாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரினதும் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுக்கொள்ளும் வண்ணமாக சீரிய பணியாற்றிய மிகவும் நேர்மையான வங்கியாளர் ஆவார். தனது நெறிப்பட்ட நல்வாழ்வால் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த மாணிக்க சிங்கி, தான் பிறந்த வட்டுக்கோட்டை மண்ணிற்கும் பெருமை சேர்த்தார். மாணிக்கசிங்கியின் ஓய்வுகாலம் மகிழ்ச்சிகரமானதாக அமைய இறைவன் அருள்புரிவானாக.

ந.பாலராமன்

ஓய்வுபெற்ற முகாமையாளர்

இலங்கை வங்கி

தலைவர்

வட்டு. இந்து வாலிபர் சங்க

கொழும்புக் கிளை.