செய்திகள்

வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நாளை மறுதினம் சென்னை பயணம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நவம்பர் 9 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதற்காக அரச சார்பற்ற அமைப்பு ஒன்று விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்றே முதலமைச்சர் சென்னை செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராகப் பதவியேற்றபின்னர் விக்னேஸ்வரன் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவைக்க இந்திய அதிகாரிகள் முயற்சித்தபோதிலும், இந்தியப் பிரதமர் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதால் அது சாத்தியமாகவில்லை.

முதலமைச்சர் சென்னை செல்வதற்கு முன்னர் புதுடில்லிக்கு அவரை அழைத்து பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் முதலில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிரதமர் மோடி எதிர்வரும் 11ஆம் திகதியன்று மூன்று நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலில் பின் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. கடந்த மே மாதம் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற வைபவத்தில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் அவர் அதனை நிராகரித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தனர். நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடிய முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை என அவர்கள் இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சரின் கடிதம் ஒன்று இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. முதலமைச்சரை நேரில் அழைத்துப் பேசுவதற்கு தான் விரும்புவதாக இந்தியப் பிரதமர் அப்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையிலுள்ள தன்னார்வ நிறுவனம் விடுத்த அழைப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்களுடைய நிகழ்வு ஒன்றில் பங்கேற்கவே அவர் நாளை மறுதினம் சென்னை செல்கிறார்.