செய்திகள்

வடமாகாண வீரர்களிடத்தில் தேசிய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ சாதிப்பதற்குரிய திறமைகள் உள்ளன: சரா

அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் அவர்களிடத்தில் உள்ளன. திறமைகளும் ஆர்வமும் இருந்த போதிலும் அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளத் தேவையான வளங்களின் பற்றாக்குறையே எமது வீரர்கள் மாகாணத்துடன் தமது விளையாட்டுப் பயணங்களையும் சாதனைகளையும் முடித்துக்கொள்ள பிரதான காரணமாக உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ‘ஹோப்’ திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்று கையில்,

கடந்த கால அரசை விட தற்போதுள்ள அரசு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாகப் பிரதேச வாரியாக விளையாட்டுக் கழகங்களை வளர்த்தெடுப்பதற்காக மேற் கொண்ட இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் இந்த அரசுக்கு நாம் செய்த உதவிக்கு அரசால் எமக்குச் செய்யப்படும் உதவி போதாது. எமது இளைஞர்கள் வேறு சிந்த னைகளில் கவனத்தைச் சிதற விடுவதை விட விளையாட்டில் கவனம் செலுத்தி தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

‘ஹோப்’ திட்டத்தின் கீழ் 15 பிரதேச செயலகங்களில் இருந்தும் மொத்தமாக 466 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்திலும், காரைநகர், உடுவில், தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்திலும் வைத்து குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், க.விந்தன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.