செய்திகள்

வட, கிழக்கு இணைந்த சுயாட்சியை இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவோம்: சுரேஷ்

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு 13 ஆவது திருத்தம் அல்ல. மாறாக இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு பூரணமான சுயாட்சியே தேவையென்பதை இந்தியப் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இலங்கை வரவுள்ள நிலையில், அன்று பிற்பகல் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின் போது என்ன விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படுமென அதன் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது தேர்தலுக்குப் பின்னரான புதிய அரசியல் சூழ்நிலை தொடர்பில் பேசவுள்ளோம். அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு, அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டு தீர்க்கப்பட்டதா என்பன தொடர்பில் விரிவாக எடுத்துரைப்போம்.

குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ள நிலையில், இந்தியாவிலுள்ள அகதிகளையும் இங்கு அழைத்து வந்து குடியமர்த்த வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் முழுமையாக குடியேற்றப்பட்டால் தான் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை குடியேற்ற முடியும். இங்குள்ளவர்களை முழுமையாக மீள்குடியேற்ற இராணுவம் காணிகளை கொடுக்க வேண்டும். இதற்கு வடக்கில் இராணுவ ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும்.

இச்சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசும் அதேநேரம், இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவோம். அதாவது 13 ஆவது திருத்தம் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதையும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களுக்கு பூரணமான சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்பது குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவோம் என்றார்.