செய்திகள்

வட மாகாணசபையின் மீன்பிடி செயற்பாடுகளை தடை செய்தல் திருத்த சட்டமூலத்திற்கு ஆலோசனைக்கு மீனவ அமைப்புகள் விசனம்

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு எனும் தமிழ் பழமொழிக்கு ஏற்ப மீனவர்களால் போராடி கொண்டுவரப்பட்ட இழுவை வலை மூலம் மீன்பிடி செயற்பாடுகளை தடை செய்தல் திருத்த சட்டமூலத்திற்கு ஆலோசனை என்ற பெயரில் வட மாகாண சபை முட்டுக்கட்டையிட்டுவதாக மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்; மற்றும் மன்னார்மாவட்ட மீனவகூட்டுறவு சங்ககங்களின் சமாசம் ஆகியன கடிதம் ஒன்றிணை வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் எம்.என். ஆலம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28.03.2016 திகதியன்று தங்களால் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இழுவை வலை மூலம் மீன்பிடி செயற்பாடுகளை தடை செய்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக 24.03.2016 வடமாகாண சபையால் முன்மொழியப்பட்டது.

வடமாகாணத்தில் இவ் இழுவை மடித்தொழில் ஊடாக மூன்று கிராமங்களில் சுமார் 1800 மீனவ குடும்பங்கள் வாழ்வதாகவும் அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படவும் அவர்கள் மாற்றுத்தொழிலுக்கு திரும்பும் வரைக்கும் காலஅவகாசம் வழங்குமாறு மாகாண சபை ஊடாக பாராளுமன்றத்திற்கு ஆலோசணைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஐம்பது ஆயிரம் குடும்பங்களை கொண்ட இரண்டு இலட்சம் மீனவர்கள் கடற்தொழிலை நம்பி வாழ்கின்றனர். சுமார் 400க்குட்பட்ட இழுவைப்படகுகளை கொண்டுள்ள மூன்று கிராமங்களில் செய்யப்படும் இத்தடை செய்யப்பட்ட தொழிலை நியாயப்படுத்தி ஆலோசனை வழங்கியமையானது தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வோருக்கு உந்து சக்தியை ஏற்படுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் மாகாணத்தில் பல மீனவ கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகினறன. வறுமையின் காரணமாக அவர்களால் செய்யப்படும் சிறு தொழில் முறைகளுக்கு காட்டாத ஆர்வத்தினை தடைசெய்யப்பட்ட இவ்இழுவை மடித்தொழிலுக்கு காட்டியிருப்பது வடமாகாண மீனவர்களாகிய எமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தவிர்த்து மாகாணத்தின் மீனவர்களின் முக்கிய தேவைகளான இறங்குதுறை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நியாயமான தொழில்களில் ஏற்படும் இடையுறுகளை தீர்க்கவும் அதற்கான தீர்;வை பெற்றுக்கொடுக்கவும் ஆர்வம் காட்டியிருக்கலாம்.

இத்தொழில் முறை நிறுத்தப்படவும் இந்திய மீனவர்களின் இவ்வாறான தொழில் முறைகள் எமது கடற்பரப்பில் நிறுத்தப்படவும் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சமாசங்களும் வடமாகாண கடல்தொழிலாளர் இணையம் என்பன இணைந்து எடுத்த நடவடிக்கையின் பயனாக இழுவைமடித்தொழிலுக்கு எதிரான சட்ட திருத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறுமான சுமந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைச்சர் அவையிலும் பின்னர் பாராளுமன்றிலும் சமர்பிக்கப்பட்டது.

இச்சட்டத்தை மேலும் வலுவுள்ளதாக ஆக்குவதற்கு பாராளுமன்றம் மாகாண சபைகளுக்கு அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது . மாகாணசபையானது கடற்சூழலை நாசமாக்கும் இத்தொழிலை நியாயப்படுத்தும் வகையில் தனது ஆலோசனையை முன்வைத்துள்ளமை. இத்திருத்த சட்டம் மூலமானது வடமாகாண மீனவர்கள் தொடர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் தலைவர்களின் சந்திப்புக்கள், சட்டத்தின் ஊடான நடவடிக்கை இதற்கென பங்களிப்புச் செய்த சிவில் அமைப்புக்கள் சமூக சிந்தனையாளர்கள், ஊடகங்கள் என பல வடிவங்களில் முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக அடைந்த ஒரு வெற்றியாகும். இதற்கு இவ்மாகாண சபை எந்த பங்களிப்பையும் செய்திருக்கவில்லை எமது போராட்டங்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டு இத்தொழில் முறைக்கு சட்டம் வருகின்ற இத்தருனத்தில் குறிப்பிட்ட சிலரின் தேவைக்காகவும் அவர்களின் குடும்ப வருமான இழப்பை காரணமாக கூறி இத்தடை செய்யப்பட்ட தொழில் முறையை நியாயப்படுத்தி ஆலோசணை வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
வடமாகாண சபையானது பதவியேற்று இரண்டறை வருடம் கடந்து விட்ட நிலையிலும் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இம்மாகாண சபையானது வடமாகாண மீனவர்களின் வாழ்வாதார இழப்பு, தொழில் இழப்பு, இயற்கை அனர்த்தம், யுத்தகால அழிவு, இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்பட்ட தொழில் உபகரணங்களின் அழிவுகள் தொடர்பாகவும் இந்திய இழுவைப் படகுகள் வடபகுதியில் ஊடுருவுதல். அவர்களின் ஆக்கிரமிப்புக்கள், வழங்கள் சூறையாடப்படல். அது போன்று தென்பகுதி மீனவர்களால் செய்யப்படும் சட்டவிரோத தொழில்கள் ஆக்கிரமிப்புக்கள் என்பன போன்ற விடயங்களிலும் குறிப்பிட்ட குறுகிய கடல்பிரதேசங்களை மாத்திரம் நம்பியிருக்கும் இம்மீனவர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் கொண்டுவரவோ பேசப்படவோ இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

இம்மாகாண சபையில் பிரதிநிதியாக தெரிவாகியுள்ள பலர் மீனவர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டது நிதர்சனம். எனவே உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு எனும் தமிழ் பழமொழிக்கு ஏற்ப எம்மால் போராடி கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்கு ஆலோசனை என்ற பெயரில் முட்டுக்கட்டையிட்டு இதன் காரணமாக இந்திய இழுவைப்படகுகளின் தொடர் வருகையும் உள்ளூர் இழுவை மடித்தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இதன் விளைவாக வடபகுதி கடல்வளம் முற்றாக நிர்மூலமாகவும் இதைசாட்டாக வைத்து அரசு இத்திருத்தச் சட்டத்தை கிடப்பில் போடுமாயின் இவ்விளைவை எமது எதிர் கால சந்ததிக்கு ஏற்படுத்தியமைக்காக இவ் ஆலோசணை வழங்கிய இச்சபை உறுப்பினர்கள் வருந்த வேண்டி வரும்.

இவ்ஆலோசணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததற்கு முன் இத் திருத்தச் சட்டம் சம்மந்தமாக எமது ஆலோசனைகளையும் பெற்று ஒரு பொதுவான தீர்மாணத்தை அரசுக்கு முன்வைத்திருக்கலாம். இது தவிர்க்கப்பட்டதனால் மாகாண சபையின் மீது வடமாகாண மீனவர்கள்; வைத்திருந்த நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழக்கும் நிலை ஏற்படும் என்பதனை இவ்வேளையில் தெரிவித்து நிற்கின்றோம்; என தெரிவிக்கப்பட்டுள்ளது.