செய்திகள்

வட மாகாண ஆளுநர் மாற்றம்: சம்பந்தன் வரவேற்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார். கிழக்கு மாகாணத்துக்கும் இதேபோல புதிய ஆளுநர்  நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும்  சம்பந்தன் கூறினார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் ததேகூ தலைவர் தெரிவித்தார்.