வட மாகாண சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு: கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம்
வடமாகாணத்தின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு அதிகரித்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம். இராணுவ மயமாக்கலை அகற்றுவது இன்றைய அவசரத் தேவையாக உள்ளது என்று வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு அதிகரித்து வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையில் அனைவரும் இயல்பாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுமாயின் மட்டுமே நீதி மைய உரிமை சார் நல்லிணக்கம் நனவாகும்.
எந்த அனுமதியுமின்றி தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். கொக்குத்தொடுவாய் வடக்கிலுள்ள புலி பாய்ந்த கல் அருகாமையில் அத்துமீறிக்குடியேறி கடற்றொழிலில் ஈடுபட்ட இவர்களைப்பற்றி தகவல்கள் சேகரிக்க சென்ற கிராமசேவை அலுவலர் சீவரட்ணம் யேசுரட்னம் இம்மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதன்பின் இவர்களது தகவலின் அடிப்படையில் அங்கு வந்த 593வது படைப்பிரிவு இராணுவ அதிகாரி கிராமசேவை அலுவலரின் தேசிய அடையாள அட்டை, உத்தியோக அடையாள அட்டை என்பவற்றை எடுத்துக்கொண்டதுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். தென்னிலங்கை மீனவர்களினதும் இராணுவத்தினதும் பொறுப்பற்ற இந்நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.
சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவது அறத்துக்கு மாறானது. இது ஆரோக்கியமானதல்ல. இது நல்லிணக்கம் நடைமுறைக்கு பொருத்தமற்றது என்பதையே வெளிப்படுத்தும். இதனால் சிவில் நடைமுறைகளை தென்னிலங்கை மீனவர்கள் மதிக்கப்பழக வேண்டும். இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
ஏற்கனவே வடமாகாணத்தில், இராணுவத்தலையீடு கல்வி அமைச்சின் பொறுப்பிலுள்ள முன்பள்ளிகளிலும் காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். . சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக, முன்பள்ளிகளில் கற்பிப்போரை சிவில் பாதுகாப்பு படையினராக நியமித்து, மாதாந்த சம்பளத்தை வழங்கி, அவர்களது இயலாமையை தமது தலையீட்டுக்கு பாவிப்பதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருத்தமானதல்ல.
இராணுவத்தை அகற்றுவதன் மூலம் தான் இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரலாம். இராணுவத்தலையீடின்றி அரச சிவில் நிர்வாகம், அரச அதிபர், பிரதேச செயலாளர், கிராமசேவை அலுவலர், பொலிஸ், நீதிமன்றம். என இயங்குவது உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும். அரச இராணுவம், அரச சிவில் நிர்வாக செயற்பாட்டுக்கு தடையாகவுள்ள இந்நிலை தொடரக்கூடாது.
மன்னார் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் வவுனியா கிறிஸ்தவ ஒன்றி யம் வன்னி கிறிஸ்தவ ஒன்றியம் வடம ராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த வடபிராந்திய கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் அமைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
R-06