செய்திகள்

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம்! வவுனியா மாவட்ட அமைப்பாளர்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம் செலுத்தி விண்ணப்பித்துள்ளதாக அக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போது தெரிவித்ததாவது,

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். தமிழ் மக்களின் அடையாளங்கள் திட்டமிட்ட ரீதியில்  கூட்டமைப்பு போன்ற தமிழ் தலைமைகளின் துணையுடன் அழிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போல் கூட்டமைப்பின் சில மக்கள் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர்.

சர்வதேச ரீதியில் தமிழர் நலனுக்கு மாறாக பரப்புரை செய்து சர்வதேச அரசியலைக் கூட அரசாங்கத்திற்கு சாதகமாக மாற்ற முனைகிறார்கள். இதனால் இவ்வாறான துரோகத்தனமான சக்திகளை வெளியேற்றி தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை முன்னிறுத்தி அதற்காக உழைக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுவே எதிர்காலத்தில் எமது இனத்தின் இருப்பை தீர்மானிக்கும்.

இந் நிலையில் தமிழ், தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், அதன் செயற்பாடுகள் காரணமாகவும் மக்கள் அக் கட்சிக்கு வழங்கிய ஆதரவை தற்போது வழங்க மறுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட அக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட இரு தினங்களுக்குள் 16 பேர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் கட்சியின் செயற்குழு பரிசீலித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.