செய்திகள்

வரலாற்றில் எல்.ரீ.ரீ.ஈ உருவானதும் இப்படித்தான் : யாழில் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக மஹிந்த தெரிவிப்பு

வடக்கில் பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தியே வரலாற்றில் விடுதலைப் புலிகள் உருவானதாகவும் இந்நிலையில் தற்போதும் அது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இது தொடர்பாக பொலிஸார் கவனம் செலுத்தி செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஊடகவியலாளர்கள் யாழ்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரமான சம்பவமாகவே இது காணப்படுகின்றது.  வரலாற்றில் இப்படித்தான் நடந்தது எல்.ரீ.ரீ.ஈ உருவானதும் அப்படித்தான் . பொலிஸார் இது தொடர்பாக கவனம் செலுத்தி செயற்படவேண்டும். பொலிஸார் வடக்கில் ஒரு சட்டத்தையும் தெற்கில் ஒரு சட்டத்தையும் செயற்படுத்த இடமளிக்கக் கூடாது. நாடு முழுவதும் ஒரே சட்டமே இருக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டது போன்றே தெரிகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.