செய்திகள்

வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்- பகுதி 2

பிறேமலதா பஞ்சாட்சரம் 

உலக நாச்சி ( கி .பி 4 நூற்றாண்டு )

கௌதம புத்தர் இறந்தன்  பின்னர் அவருடைய சிதையிலிருந்து எடுக்கப்பட்ட  பற்கள் மற்றும் எலும்புகள் பௌத்த தர்மத்தை அல்லது மதத்தினைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவருடைய ஒரு பல் (புனித தந்த தாது )  கலிங்க தேசத்தை ( இன்றைய ஒரிசா மற்றும் மேற்கு ஆந்திர பிரதேசத்தை உள்ளடக்கிய  பகுதி)  ஆட்சிசெய்த பிரம்மதத்தன் என்னும் மன்னருக்கு அளிக்கப்பட்டது, அம் மன்னன்  தண்டாபுரம் என்னும் நகரில் ஓர் ஆலயத்தில் வைத்து அதனை  வழிபாடு செய்து வந்தான்.

பல மன்னர்களின் ஆட்சியின் பின்னர் குகசிவன் என்ற மன்னனின் காலப் பகுதியில் ( ( கி .பி 4 நூற்றான்டு ) அப்புனித தந்த தாதுவினை தரிசிப்பதற்காக வந்த உஜ்ஜைனி இளவரசருக்கு குகசேனன் தனது மகள்  கேமமாலாவை மணமுடித்துக் கொடுத்திருந்தார். குகசிவனுக்கும் இன்னுமொரு  மன்னனுக்கும் இடையில் போர் எழ  புனித தந்த தாதுவினைப் பாதுகாக்கும் பொருட்டு குகசிவன் தனது மகளிடம் அதனைக் கொடுத்து தனது நண்பனான  இலங்கை மன்னன்  மேகவர்ணனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் படி மகளையும் மருமகனையும் கடல் மார்க்கமாக அனுப்பி வைத்தான். (The  tooth of buddha  by Harvey Rachlin -01 January 2000) .

ulakanachi

உலகநாச்சி சிலை 

கேமமாலா தனது  கொண்டையில் ஒளித்து வைத்து  எடுத்து வந்த தந்த தாதுவே இன்று கண்டி தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது ஆகும். பௌத்தத்தை முன்னிறுத்த சிங்கள  நூல்கள் சொல்லாமல் சென்றுவிட்ட கேமமாலா  பற்றிய மிகுதியான  வரலாறு எங்கே தொடர்கின்றது எனப் பார்க்கும் முன் கேமமாலா தமிழ்ப் பெண்ணா என்ற கேள்வி எழுகின்றதல்லவா? கலிங்க நாட்டானது கி.மு இரண்டாம்  நூற்றாண்டாளவில் காரவேலன் என்னும் பேரசராசனால்  ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. ஒரிஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள  புபனேஸ்வர் என்னுமிடத்தில் உதயகிரி மலையிலுள்ள குடவரைக் கோவில் ஆத்திக்கும்பா  கல்வெட்டு ( Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) அம்மன்னனின் ஆட்சிக்கால நிகழ்வுகள்  பற்றிய   மிகவும் விரிவான செய்தியைத் தருகின்றது. கலிங்கதேசம் பல்வேறு காலங்களில் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்ததனை இலக்கிய மற்றும் கல்வெட்டுக்கள் சான்றுப்படுத்துகின்றன. குகசிவன் என்பது தூய தமிழ்ப்பெயர் என்பதுடன் காரவேலன் மற்றும் அத்தி என்பன  தூய தமிழ்ப்பெயர்களே .

hema mala 2

ஹேமமாலா 

உலகநாச்சி என அழைக்கப்படும் கேமமாலா தமிழ்ப் பெண்ணாதலால் தமிழர்கள் மிகுந்து வாழ்ந்த ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள  மண்முனைப்பகுதியை (இன்றய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளது)   மேகவர்ணனிடம் கேட்டுப் பெற்று தனது சிற்றரசை  நிறுவி 20 ஆண்டு காலம் ஆட்சி செய்ததாக அறிய முடிகின்றது.

மண்முனையில் உலகநாச்சி (கேமமாலா) தன்னுடன் எடுத்து வந்த பாணலிங்கத்தை வைத்துக் கோவில்கட்டி வழிபாடு இயற்றினார். அக் கோவிலே பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட  காசிலிங்கேஸ்வரம்  என்ற சிவாலயம் ஆகும்.  உலகநாச்சி தனது மண்முனை இராஜதானியை  விரிவாக்கும் பொருட்டு கொக்கட்டிச் சோலைப் பிரதேசத்திலுள்ள  காடுகளை வெட்டி அழிக்க உத்தரவிட்ட போது அங்குள்ள கொக்கட்டி மரப் பொந்தொன்றில் திகடன் என்ற வேடனால் சிவலிங்கம் ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை வந்து பார்த்த  உலகநாச்சியார் கொக்கட்டிசோலையில் தான்தோனீஸ்வரர் சிவாலயத்தை அமைத்தார் என்றுமட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது .   உலகநாச்சியார் தான் கட்டிய  காசிலிங்கேஸ்வர  சிவாலயப்  பகுதி மக்களையும் அதனையண்டிய ஆராயம்பதி பிரதேசத்து மக்களையும் ஊர்வலமாக  அழைத்துச்சென்று கொக்கட்டிசோலை சிவாலய தேர் திருவிழாவின் பொழுது தேருக்கு வடம் பூட்டும் நிகழ்வினையும் நடாத்தினார் என்பது வரலாறு .

வன்னி நாய்ச்சிமார் ( கி .பி 16ம் நூற்றாண்டு)

வன்னி மண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் வன்னிய  மன்னர்கள்  பற்றி நிறைய வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. அவர்கள் காலத்தே வாழ்ந்த பெண்களும் வீரத்தால் குறைவுபட்டவர்கள் அல்ல எனக் கூற வன்னிப் பிராந்தியத்தில் புழக்கத்தில் உள்ள  வாய்மொழிக் கதைகளிலும் நாட்டாரிலக்கியங்களிலும்  சான்றுகள் உள்ளன .  இக் கதைகளையும் நாட்டார் இலக்கியங்களையும்   ஆய்வுசெய்த  பேராசிரியர் கு. கணபதிப்பிள்ளை  1950ல் “வன்னி நாட்டை அரசுபுரிந்த வனிதைகள், பறங்கியருடன்   போரிட்டு உயிர்நீத்த வீரப்பெண்கள் , நாய்ச்சிமார் .” என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இந்நாய்ச்சியார்களின்  வரலாற்று   நிகழ்வு போர்த்துகேயர்களின் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது முல்லைமணி  வே சுப்பிரமணியத்தின் வன்னியியற் சிந்தனை என்னும் நூலில் (பக்கம்  42) குறிப்பிடப் பட்டுள்ளது.

nachchimarkovil mullaitivu

நாச்சிமார் கோவில் -முல்லைத்தீவு 

வன்னி நாய்ச்சிமார் மான்மியம் என்ற நாட்டார் கதைப்பாடல்களை 1981ல்  திரு சண்முகசுந்தரம் என்பவர் வெளியிட்டுள்ளார் . அதிலுள்ள பாடல்களின் மூலம்  இம்மகளீரைப் பற்றிய கதையானது  வன்னியில ஆட்சி செய்த ஆறுவர்  ஆட்சிசெய்து வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு தலயாத்திரை போவதற்கு எண்ணம் பூண்டு தமது ஆட்சியை மாமனாரான நாகப்பரிடம் ஒப்படைத்து விட்டுச்  சென்றபோது அவர்களுக்கு எதிரியாகவிருந்த பெருமலைய ஆண்ட நம்பி என்பவன் பறங்கிப்படைக்கு தகவல் சொல்லி ஏவிவிட பறங்கியர் படையெடுத்து வந்தனர். நாகப்பர் போரை எதிர்கொண்டார் போர் முடிந்யம்  பொழுது குதிரையிலிருந்து வீழ்ந்ததனால் மூர்ச்சையாகி மூன்றாம் நாள் இறந்து விட்டார். இதனை அறிந்த நம்பி மீண்டும் பறங்கியரை ஏவிவிட  நாய்ச்சிமார் அறுவரும் ஆண்வேடமிட்டு போர் புரிந்தனர். இதனை

“பெண்மை மறைய ஆண்வேடம் பூண்டு

கண்கள் கனல் பறக்க அனல்களத்துக் குதித்தார்

துப்பாக்கி சூத்திரம் தாங்கும் பறங்கி

இப்பால்வராமல் அவர்நின்று பொருதார்.

( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)

அவ்வாறு போரிடும் வேளையில் வன்னிய போர்த் தளபதியை நம்பியின் கைக்கூலி ஒருவன் பதுங்கியிருந்து தாக்கி கொன்று விட்டான். இருந்தும்   நாய்ச்சிமார் அறுவரும் சளைக்காது போர்வீரர்களின்  துணையுடன் பறங்கிப்படையை எதிரித்துப் போரிட்டனர். ஆயினும் பறங்கியரின் துப்பாக்கிகளின் பலத்தின் முன் ஈடுகொடுக்க முடியாமல் போர்வீரர்கள் நிலைக்கெட்டு தத்தளித்தார்கள். அதனை வன்னி நாய்ச்சிமார் மான்மியம் பின்வரும் பாடல்களால்  விளக்குகின்றது .

துப்பாக்கி சூத்திரம் தாங்கிவரு  பறங்கியர்

தப்பாமல் தாக்கினார் வன்னி மறவீரரை

மலைத்து நின்றார் வன்னி மறப்போராளர்  அம்மா

நிலைகுலைந்து நெறிகெட்டு தத்தளித்தார் நின்றார்

சோர்வினால் நிலையிழந்த வன்னிமற வீரர்கள்பின்வாங்கி  காடுகளுக்கு சென்று ஒதுங்கியதாகவும் நிலைமையை உணர்ந்த வன்னி நாய்ச்சியார்கள் அறுவரும்  மாற்றார்கள் (பறங்கியர் ) கரம்பட்டு மானமிழப்பதிலும் பார்க  மாண்புடைய மரணத்தை தழுவுவதை மேலெனக் கருதி தமது மரணத்தை வரித்துக் கொள்ள முடிவெடுத்தனர் . இதனை

மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை

ஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்

பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை

செங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….

பேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து

வீரா வேசமுடன் நஞ்சுண்டு  மடிந்தனரே …

கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது

அற்புருக நின்றார்கள்  வன்னிவள நாட்டினர் கள்

முல்லைதீவு கரைதுறைப்பற்று வட்டுவாகல் பகுதியில் உள்ள சப்த கன்னிமார் கோவில் பலநூறாண்டுகள் பழமையானது என்பதுடன் முல்லைத்தீவானது காலகாலமாக வன்னி மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்தமைக்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இவ் வரலாறுப் பின்னணியில் உள்ள  நாய்ச்சிமார் வழிபாட்டுடன் கலந்த இக் கன்னிமார் ஆலயம் வீரமிகு வன்னிமண்ணின் வனிதையர்கள் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளபோதிலும் அதனை நிறுவ வேறு வலுவான சான்றுகள் இல்லை.

அரியாத்தை (கி பி 17/ 18ஆம் நூற்றாண்டு)

வேழம் படுத்த வீராங்கனை , ஆனையை அடக்கிய அறியாத்தை, மதயானையை வென்ற மாதரசி என்றெ ல்லாம் புகழப்படுகின்ற ஒரு வீரப் பெண் வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள   குமுளமுனைக் கிராமத்தில் வன்னி மன்னன் சின்னவன்னியனின்  ஆட்சிக் காலத்தில்  வாழ்ந்ததாக வன்னிய வாய்மொழி இலக்கியதிலிருந்து    அறிய முடிகின்றது. குமுழக்கமுனைக் கிராமத்தில்  தாமரைக்கேணி பகுதியில் உள்ள கண்டல் காட்டிலுள்ள மதயானையொன்று ஊரில் புகுந்து பல அழிவுகளைச் செய்கின்றது . இதனை தடுப்பதற்காக சின்ன வன்னியன் ஏழு ஊர் பணிகர்களை (யானை  பிடிப்பவர்கள் ) அழைத்து அதனை எவ்வாறு பிடிக்கலாம் என்று ஆலோசிக்கின்றான். அங்கே வந்த பணிக்கருள் ஒருவன் வேலப்பணிக்கனே அத்தகைய யானையைப் பிடிக்க வல்லவனெனக் கூற இன்னொரு பணிக்கன்  அவனை இகழும் முகமாக வேலப்பணிக்கனால் பிடிக்க முடியாது அவனுடைய மனைவி அரியாத்தையாத்தைதான் பிடிப்பாள் என எள்ளி நகையாடுகின்றான். இதைகேட்டு வாட்டமுடன் வீடுதிரும்பிய வேலப்பணிக்கன் அரச சபையில் நிகழ்ந்தவற்றை தனது மனைவி அரியாத்தையிடம் கூறுகின்றான். அந்நிகழ்வினால் வாட்டமுற்ற வேலப்பணிக்கனைத் தேற்றிய அரியாத்தை   அந்த யானையை தானே பிடித்து வருவதாக கூறி காட்டுகுச் சென்று அதனை பிடித்து அதன் மேல் ஏறி  வந்து ஊரிலுள்ள ஒரு புளியமரத்தில் கட்டி வைத்தாள். இச்செய்தியை அறிந்த மன்னன் அவளை அரண்மனைக்கு அழைத்து சிறப்பித்தான். ஒரு பெண் யானையை அடக்கினாள்  என்பதை விரும்பாத பணிக்கருள்    எவரோவொருவர் அரச சபையில் அவள் உண்ட  தாம்பூலத்தில்  நஞ்சைத் தடவிக் கொடுத்ததானால் அதனை உண்ட  அரியாத்தை இறந்து போகின்றாள் என வாய்வழி செய்திகள் கூறுகின்றன. அரியாத்தை இறந்த துயர் தாங்காது வேலப்பணிக்கன் அவளுடைய சிதையிலே விழுந்து உயிர்விட்டான். இக் கதையை நினைவுகூரும் முகமாக வேலப்பணிக்கனின் ஒப்பாரிப் பாடல்கள்  வன்னி மக்களிடையே பாடப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

ariyaththai

அரியாத்தை 

வேலப்பணிக்கன் ஒப்பாரிப் பாடல்களில் வருகின்ற பாடல் ஒன்றின் மூலம் இந்நிகழ்வானது ஒல்லாந்தர் காலப்பகுதியில்இடம்பெற்றதாக கருத இடமுண்டு.

 உலாந்தா மறியல் என்றால்

என் ஆசை அவுறுகமே

என் ஆசை மச்சாள் தோழி யரே – நானும்

கூடவே நானிருப்பேன்

(பந்தி 90, பக்கம் 101, 1934, வ. கணபதிப்பிள்ளை)

ஆனையை அடக்கச்சென்ற அரியாத்தை தன்வீரத்தாலன்றி கற்பினால்தான் ஆனையை அடங்கியதாக கூறும் பாடல் வரிகள்

கற்புடையாள் நானாகில் -உன்

கையத்தான் நீட்டுமென்றாள்

அந்த மொழி கேட்டவுடன் அவ்

யானை கையைத்தான்  நீட்டியதே

“அரியாத்தை தன்வீரத்தால்  அல்ல  கற்பு நெறியால்தான்  ஆனை கட்டியது என்னும் கருத்து ஆணிக களின் மேலாதிக்கத்தை குறிக்கிறது “. (முல்லைமணி – வன்னியியற் சிந்தனை பக்கம் 45) .

இக் கதையினை மையமாக வைத்து ஈழப்போர்க்காலப் பகுதிகளில் வெளிவந்த படைப்பிலக்கியங்கள் அரியாத்தையின் வீரத்தை மக்களுக்கு எடுத்தியம்புவதாக உள்ளன. தமிழீழ தேசியக் கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையினால் எழுதப்பட்ட “கூண்டை திற” என்ற கவிதை அரியாத்தையின் வீரத்தை ஏற்றிப் போற்றுகிறது.

ஆண்டு பலவாக அடங்கி

குனிந்த தலை

மீண்டும் நிமிர்த்தாது இருக்கின்றாய்

அந்தோ பார்

காலடிகள் பட்டு கசங்குகின்றது புல்

நாங்கள்

நாலடிகள் எடுத்து நடப்பதற்குள்

முன்போல,

மீண்டும் நிமிர்ந்து மிடுக்கோடு நிற்கிறது!

யானையைக்கூட அடக்கினாள்

“அரியாத்தை”

யாரிவள்?

உன் பூட்டி,

பூனைக்கண்ணோடு புகுந்த அந்நியனை

ஓட விரட்டினான் ஒருவன்,

யாரிவன்?

உன் பூட்டன்,

வேண்டும் உனக்கிந்த வீரம்

தமிழனே!

கூண்டைத்திறந்து குதித்து வெளியே வா.

(தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரை)

முதல் பாகம்: 

http://www.samakalam.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88/