செய்திகள்

வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்

பிறேமலதா பஞ்சாட்சரம்

ஈழம் எனும் பெயராலேயே  பழந்தமிழ் இலக்கியங்களிலே இலங்கைத் தீவு    பெரும்பாலும் அழைக்கப்பட்டது. இலங்கைத் தீவானது  தொல்தமிழ் நாகரிகம் தோன்றிய  குமரிக்கண்டத்தினை கடல்கொண்டதன் விளைவாக இந்தியத்  துணைக்கண்டத்திலிருந்து பிரிந்ததாக கருதப்படுகின்றது.

இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களை  பொதுவாகவே “ஈழத் தமிழர்கள்” என தமிழுலகோர் அழைப்பது வழமை.

ஈழத்தின் பழைய வரலாறு

ஈழத்தின் பழைய வரலாறு இராவணன் காலத்துடன் தொடங்குகின்றது. இராம- இராவணப்  போரானது இற்றைக்குக்கு 9300 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக  வரலாற்று ஆய்வாளரான Dr P V Vartak நிறுவியுள்ளதன் அடிப்படையிலும் அவன் ஆண்ட ஈழம் கடல் கொண்ட குமரியின் எஞ்சிய பகுதி எனும் அடிப்படையிலும் அவன் தமிழ் மன்னனே என ஐயந்திரிபற தெளிவடைய முடிகிறது.

மேலும் இந்திய  தேசிய கடலியல் நிறுவனத்தின் (India’s National Institute of Oceanography) ஆய்வாளர்களின் கருத்தின்படி புவி வெப்பமடைந்ததன் காரணமாக இற்றைக்கு   12000 முதல் 10000 ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட கடல்கோள்களினால் இந்திய இலங்கை கடற்கரைகளில் இருந்த பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கின்றன என்பது மெய்ப்பிக்கபட்டிருக்கின்றது.  இலங்கையானது கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதியென்பது கடல்சார் ஆய்வாளர்  ஒரிசா பாலு அவர்களின் முடிவாகும். இக்காலப்பகுதிகள் முதல் சங்கம் எழுந்த காலப்பகுதியாக தேவநேயப் பாவாணர்  (1902-1981) கணித்ததையும் கருத்தில் கொண்டு பார்குமிடத்தும் இராவணனின் காலம் முதற்சங்கம்  தோன்றிய காலத்துடனே ஒத்துப் போகின்றது. ஆதலால் இராவணன் பேசிய மொழிய தமிழ் மொழியாகவே இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சூர்ப்பனகை:

மண்ணால் தொடங்கியது பாரதப்போர் பெண்ணால் தொடங்கியது இராமாயணப் போரென்பர். soorpanakai 2வாண்டார் குழலி என அழைக்கப்படும் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை இராமன் மீது காதல்வயப்பட்டதால் அவளின் மூக்கை இலட்சுமணன் அரிந்ததன் காரணமாகவே  சினமுற்ற இராவணன் சீதையை சிறை செய்தன் விளைவு இராமாயணப் போர் என்பது வடமொழி வால்மீகி இராமாயணம் தரும் செய்தியாகும். தங்கையான தமிழ் மறத்தி சூர்ப்பனகையை  பங்கம் செய்த பாதகரை பழிவாங்க  இராவணன் சீதையை சிறை வைத்தானே அன்றி அவள் மீது மோகம் கொண்டல்ல. போரில் வென்றோரை அவர் சார்ந்தோர் ஏற்றிப் புகழுமிடத்து தோற்றோரை இகழ்ந்து சித்தரிப்பது வழமையானது. இராமனின் புகழை உயர்த்த வால்மீகி இராவணனை கீழ்மைப் படுத்தியதே உண்மை.  சீலம் நிறைந்த மன்னன் என்னும் காரணத்தாலேயே    இன்றுவரை இலங்கையில் மட்டுமன்றி இந்தியா மற்றும் தென்கிழக்காசியநாடுகளிலும்   இராவணனின் சிற்பம் மற்றும் சிலைகள், கைலாய வாகன கோலத்தில் சிவனைத் தாங்கும் வாகனமாக இராவணன் வழிபடப் படுகின்றான்.

இராமனை கடவுளாக காட்டிய கம்பர் கூட யுத்த காண்டத்தில் மண்டோரோதரி புலம்பலாக இராவணன் பற்றிய தனது உள்ளக்கிடக்கையை பின்வரும் பாடலூடாக சொல்லாமல் சொல்லியுள்ளார்.

வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்,

எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ?

கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும்” எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி?

                                                                           (கம்பராமாயணம் –பாடல்  9940)

வாளி -அம்பு

எள் இருக்க இடமில்லாதவாறு இராவணனின் உடலை துளைத்த  வெளிவந்த இராமனின் அம்புகள் ஜானகி (சீதை) யின் மேல் இராவணனுக்கு காதல் இருக்குமா என அவன் உடல் புகுந்து உயிர் இருக்கும் இடம்வரையும்  சென்று வெளிவந்தன. வணனுக்கு சீதை மேல் காதல் உண்டென்றால் அவன் உயிர் பிரிந்த பொழுது கம்பர் இப்பாடலூடாக அதை வெளிப்படுத்திப் பாடியிருப்பாரல்லவா? இராமனின் அம்புகள் தேடிச் சென்றன என்பதனூடாக இராமன் தான் அவ்வாறு சந்தேகப்பட்டுள்ளான் என்பதற்கு கம்பர் காட்டிய இப்பாடல் ஓர் சான்று .

குவேனி (கி.மு 503)    :

இலங்கையின் வரலாற்றை கூறுகின்ற  தீபவம்சம்  மகாவம்சம் போன்ற பாளி நூல்களின் படியும் சிங்கள இனத்தின் வரலாறு  இலங்கைத் தீவில் தொடங்குவது மாந்தை எனும் பகுதியை அரசாட்சி  செய்த குவேனியை விஜயன் மணந்ததன் மூலம் அவளது அரசாட்சியை பறித்ததை சான்றுப்படுத்துகின்றன.

கலிங்க தேசத்திலிருந்து  சிங்கபாகுவால்   நாடுகடத்தப்பட்ட  விஜயனும்  அவனது 700 தோழர்களும்  ஈழத்தின் புராதன துறைமுகமான  மாந்தையில் வந்திறங்கியதன் பின்னர்  அந்தப் பகுதியை அரசாட்சி செய்த குவேனியை தந்திரமாக  திருமணம் செய்து  அரசாட்சி தனதாக்கி  குவேனியையும் அவளது இரண்டு குழந்தைகளையும்காட்டுக்கு விரட்டியடித்த வரலாறு பதியப்பட்டுள்ளது.

மாந்தை துறைமுகமானது  மரந்தை துறைமுகம் என  சங்ககாலத்தில் வழங்கப் பெற்றதனைக்   குறுந்தொகையில் வருகின்ற பாடலில் காணக்கூடியதாக உள்ளது.

“தண் கடற் படு திரை பெயர்த்தலின்

வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்

 ஊரோ நன்றுமன், மரந்தை;

ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

(குறுந்தொகை 166)

மகாவம்சம் குவேனியை  இராவணனின் வழித்தோன்றல் என்று கூறுவதன் மூலமும் விஜயனின் வருகைக்கு முன்னரே   இலங்கையைச் சூழ பழமை வாய்ந்த ஐந்து  சிவாலயங்கள் இருந்ததையும் அதில் ஓன்றான திருக்கேதீஸ்வர ஆலயம் குவேனி ஆட்சி செய்த பகுதியான இன்றய மன்னார் மாவட்டத்துகுள் வருகின்றது. மகாவம்ச வரலாற்று தகவல்களின் படியும், மன்னார் மாவட்ட  குதிரைமலைப் பகுதியில் உள்ள  அல்லி அரசி  பற்றிய செவிவழிக் கதைகளும் தொடர்புபடுவதால் குவேனி தமிழ் அரசியாக இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம் எனக் கூறமுடியும்.

மகாவம்சத்தின் 7வது அத்தியாயம்  குவேனியிடமிருந்து அரசுரிமையப் பெற்ற வியஜன் அவளையும் அவளது பிள்ளைகளையும் காட்டுக்கு விரட்டிவிட்டு பாண்டிய அரசிடமிருந்து அரசிளம்குமாரிகளை அழைத்து தானும் தனது தோழர்களும் மணந்து கொண்டனர் என கூறுகின்றது.

Kuveni

அண்மையில் வில்பத்து சரணாலயத்தில் மேற்குப்பகுதியில் குதிரைமலைப் பிரதேசத்தில்  கண்டு பிடிக்கப்பட்ட அரண்மனையின்  அழிவுத்தடங்கள் குவேனியினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இவ்வரண்மனை  தொரடர்பாக இப்பகுதி மக்களிடம் நிலவுகின்ற செவிவழிக்கதைகளின் படி இப் பிரதேசத்தை  அல்லி என்ற அரசி அரசாண்டதாகவும் அவள் ஆண்கள் மீது வெறுப்புற்று  தனது படையணியில் பெண்களையே படைவீரர்களாக வைத்திருந்தாள் என்றும் கூறுகின்றனர் என Sunday Obsever பத்திரிகையில் வெளிவந்த  கட்டுரையில் (08.12,2013) Mahil Wijesinghe கூறுகின்றார். அக்கட்டுரையில் வில்பத்து சரணாலயப்பகுதிகளில் வேறும் பல அரண்மைகளின் அழிவுத்தடையங்கள் உண்டெனவும் கூறுகின்றார்.

மணிமேகலை :

Manimekalaiஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் காப்பியத்தலைவி  மணிமேகலை தன்னை காதலித்த சோழ இளவரசன் உதயகுமாரனிடமிருந்து தப்பித்து துறவறத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக அடைக்கலம் கொடுத்தது ஈழம். ஈழத்தில் அன்றைய காலப் பகுதியில் மணிபல்லவத்தீவு, எனக்குறிப்பிடப் பட்டுள்ள இடம் இன்றைய  நயினா தீவு .

ஆடல்கலையில் சிறந்து விளங்கிய   மாதவியிடம்  கணிகைகள் குலத்திலே  பிறந்ததன் காரணமாக  சுகத்தை மட்டுமே அனுபவித்துவிட்டு அவளின் வயிற்றில் குழந்தையினை கொடுத்துவிட்டு  கைவிட்டு சென்ற கோவலனுக்கு பிறந்த மகளே மணிமேகலை.

கோவலனுக்காக காத்திருந்த மாதவி அவன் கொலைசெய்யப்பட்டதன்  பின்னர் தன்னுடைய மகள்  மணிமேகலையுடன் துறவறம் பூணுகின்றாள். ஒருநாள் துறவிகளின் ஆச்சிரமத்தில் இருந்த   மாதவி தனது நெடுந் துயரத்தை அவளது  தோழி  வசந்தமாலையிடம் கூறுவதை மாலை தொடுத்துக் கொண்டிருந்த போது செவிகளில்  உள்வாங்கிய  மணிமேகலை   துயருற்று கண்ணீர் சிந்தியதை  காப்பிய புலவரான சீழ்த்தலை சாத்தனார் பின்வருமாறு பதிவு  செய்திருக்கின்றார்.

“தந்தையும் தாயும் தாம்நனி உழந்த

வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்

காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை…”

துறவறத்தில் இருந்த மணிமேகலையின்  அழகினைக் கண்டு அவள் மீது காதல் கொண்ட உதயகுமாரனின் மேல்  மணிமேகலை காதலுற்றத்தை

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!       (5: 84-90)

எனக் கூறி தனது தாய்க்கு நிகழ்ந்த நிலைமை  தனக்கும் நிகழ்ந்து வீடக் கூடாது என்பதற்காக காதலை வெறுத்து துறவறத்தில் தொடர்ந்து ஈடுபட மணிமேகலை சென்ற இடமே மணிபல்லவத் தீவு . காப்பிய உயர்வின் பொருட்டு மணிமேகலா என்னும் தெய்வமே மணிமேகலையை மணிபல்லவ தீவில் கொண்டுவந்து விட்டதாக சொல்லினும் ஆணாதிக்க நிலை அன்றய சமுதாயச்    சூழ்நிலையில் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள இக்காப்பிய நிகழ்வுகள் மூலம் ஆய்ந்துணர முடியும்.

மணிபல்லவத் தீவுக்கு வந்த மணிமேகலை  தனக்கு கிடைத்த “அமுத சுரபி” என்ற அட்சய பாத்திரத்தின் மூலம் பசிப்பிணி நீக்கி அறத்தையும்   அங்கே பௌத்த மதத்தை வளர்த்தாள் என்று மணிமேகலை கூறுகின்றது. இலங்கையில்   மகிந்த தேரரின் வருகைக்கு முன்னரே பௌத்த மதம் பரவியிருந்ததற்கு மகோதரன் குலோதரன் என்ற நாக அரசர்களிடையே மாணிக்க சிம்மாசனம் தொடர்பாக இடம்பெற்ற போரின் போது புத்தர் தோன்றி தலையிட்டு தீர்த்து வைத்தார்  என்பதை  மணிமேகலையும் மகாவம்சமும் குறிப்பிடுகின்றன. புத்தர் தோன்றினார் அல்லது அவர் வாழ்ந்த காலத்தே  இலங்கைக்கு வந்தாரா இல்லையா என்ற தர்க ரீதியான வாதத்தை விடவும் அப்போது பௌத்த மதம் பரவியிருந்ததை சான்றுப்படுத்த மணிமேகலை உதவுகின்றது.   (தொடரும் …)