செய்திகள்

வரவு செலவுத்திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள விடயமும் உள்வாங்கபட வேண்டும்: பெரியசாமி பிரதீபன்

அரசாங்கத்தில் முன்வைக்கப்படும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களின் சம்பள விடயங்கள் முன்வைக்க்பபடுவதனைப் போல பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு விடயங்களும் உள்வாங்கப்படவேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட தோட்டப் புறங்களில் இடம்பெற்ற அடையாள வேலை நிறுத்தப் போராட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், பொகந்தலாவ, கொட்டகலை, மஸ்கெலியா, டயகம உள்ளிட்ட பல தோட்டப்புறங்களில் சம்பள உயர்வு கோரிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தலைமையேற்று பெரியசாமி பிரதீபன் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலத்திற்கு ஏற்ற ஊதியம் இதுவரை காலமும் வழங்கியதில்லை. அன்றுதொட்டு இன்று வரையில் பொருளாதார சுமைகளுடனேயே இந்த மக்கள் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஏனைய துறைசார்ந்தோரின் வேதன அதிகரிப்பிற்கு அக்கறை செலுத்தும் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வேதனம் தொடர்பில் அக்கறை செலுத்தத் தவறியுள்ளதாக என்ற கேள்வியே தற்போது தோன்றியுள்ளது, அத்தோடு அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் இம்மக்கள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் தொழிற்சங்க ரீதியான வேலை நிறுத்தப் போராட்டங்கள் மலையகத்தில் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.