செய்திகள்

வர்த்தகர்களுக்கான நடைமுறைகளை வெளியிட்டது யாழ்.வணிகர் கழகம்

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நடவடிக்கைகளைச் சுமூகமாகவும், சட்டபூர்வமாகவும் மேற்கொள்ளக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை யாழ்.வணிகர் கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன்,செயலாளர் இ.ஜனக்குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு வர்த்தகர்களும் தங்கள் வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தல் அளவீட்டு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வர்த்தகரும் தங்களால் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறுத்தல் அளவீட்டு உபகரணங்களையும் ஒவ்வொரு பன்னிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அளவீட்டு அலகுகள் இ நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் இலட்சிணையிடப்படுத்தியே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமைகளில் அளவீட்டு அலகுகள் நியமங்களுக்கான மற்றும் சேவைகள் திணைக்களத்தில் நிறுத்தல் அளவீட்டு உபகரணங்களுக்கு இலட்சிணையிடப்படலாம்.

ஒவ்வொரு வர்த்தக ஸ்தாபனத்திலும் பாவனையாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் நுகர்வு பொருட்களின் நிறுத்தல் அளவையை சரிபார்க்க கூடிய வகையில் பாவனையாளர்கள் பாவனைக்காக இலட்சணையிடப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான நிறுத்தல் அளவைகள் உபகரணத்தை தெளிவாக தெரியக் கூடிய வகையில் பொருத்தி வைத்திருத்தல் வேண்டும்.

அனைத்துப் பொதியிடப்பட்ட பொருட்களின் மேலுறைகளிலும்; உற்பத்தியாளரின் பெயர்,நிறை,அளவு,உற்பத்தி திகதி மற்றும் காலாவதியாகும் திகதி என்பன காணப்படல் வேண்டும்.

தேவைக்கதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து நீண்ட காலம் வர்த்தக ஸ்தாபனங்களில் தேக்கி வைத்திருத்தலை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல் பிரச்சினைகளை தவிர்க்க உதவும். காலாவதியான பொருட்களை உற்பத்தியாளர்களோ வழங்குனர்களோ மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் இறுக்கமான தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிலிருந்து பொருட்கள் கொள்வனவு செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

வர்த்தக நிலையங்களிலும் உணவுச் சாலைகளிலும் பாவனையாளர்கள் பார்க்க கூடியவாறு விலைப்பட்டியல் தெளிவாக காட்சிப்படுத்தப்படல் வேண்டும். மருந்து விற்பனை நிலையங்களில் தங்களிடமிருக்கும் சகல மருந்து பொருட்களின் விலை விபரங்கள் கோவையிடப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படல் வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படாத மருந்து வகைகள் மற்றும் அழகு சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை (போதையூட்டக் கூடிய பொருட்கள்) விற்பனை செய்தல் நிறுத்தப்படல் வேண்டும்.
சிகரெட் மதுபானம் போன்றவற்றை இருபத்தொரு வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பதை முற்றாக நிறுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் சிகரெட் புகைத்தல் மற்றும் மது பாவிப்பது என்பன தடை செய்யப்பட்டுள்ளமையை வர்த்தகர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் அறிவித்த கட்டுப்பாட்டு விலைகளுக்கு மேலதிகமாக பொருட்களினை விற்பனை செய்வதை வர்த்தகர்கள் நிறுத்தல் வேண்டும். கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் யாழ் வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
பொதியிடப்பட்ட பொருட்களின் லேபிள்களில் ஒருபோதும் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்த கூடாது.

உற்பத்தியாளரால் உறுதிப்படுத்திய பொருட்களின் உத்தரவாதத்தை வர்த்தகர்கள் பாவனையாளருக்கு உறுதி செய்ய வேண்டும். பொருட்கள் விற்பனையின் போது பாவனையாளர்களுக்கு திகதி மற்றும் விலை விபரங்களுடன் பற்றுச்சீட்டு வழங்குதல் வேண்டும்.ழுn யுppசழஎயட(போலிப் பற்றுச் சீட்டு) தலைப்பிலான பற்றுச்சீட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ தவிர்க்கப்படல் வேண்டும்.

உற்பத்தியாளரால் அல்லது விநியோகஸ்தரால் வழங்கப்படும் இலவச இணைப்புக்கள் பாவனையாளருக்கு கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
பாவனையாளர்களுக்கு மீதிப்பணத்தை வழங்க வேண்டியது வர்த்தகர்களின் பொறுப்பாகும். வர்த்தகர்கள் தங்களுக்கு தேவையான சில்லறைகளை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். வங்கிகள் எவையேனும் சில்லறைகளை வழங்க மறுத்தால் தங்கள் பகுதிகளுக்குரிய உதவி அரசாங்க அதிபர்களுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரியப்படுத்தப்படும் கடிதத்தின் ஒரு பிரதியை யாழ் வணிகர் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

மொத்த வியாபாரத்திலும் சில்லறை வியாபாரத்திலும் கடன் வழங்குவது தொடர்பில் வர்;த்தகர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அறிவுறுத்துகின்றது.

மேற்படி நடைமுறைகளில்; பல 26.05.2015 அன்று கச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை,அரசாங்க அதிபர் மற்றும் பாவனையாளர்களுடனான கலந்துரையாடலின் போது அனைத்து தரப்பினராலும் ஏற்கப்பட்டவையாகும். எனவே அனைத்து வர்த்தகர்களும் இந் நடைமுறைகளை அக்கறையுடன் இன்று 01.06.2015(திங்கட்கிழமை) திகதி முதல் மிகவும் இறுக்கமாக அனுசரிக்குமாறு யாழ் வணிகர் கழகம் வர்த்தகளுக்கு ஆலோசனை வழங்குகின்றது. இதனால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் யாழ் வணிகர் கழகம் அறியத்தருகின்றது.

அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களையும் அனுசரித்து தங்கள் கவனத்திற்கு யாழ் வணிகர் கழகத்தால் மேற்படி நடைமுறைகள் சமர்ப்பிக்கப்படுகிறது எனவும் யாழ்.வணிகர் கழகம் மேலும் தெரிவித்துள்ளது.
யாழ்.நகர் நிருபர்-