செய்திகள்

வலிகாமம் வலயப் பாடசாலைகளில் அதிபர்களுக்குப் பொருத்தமற்ற சந்தர்ப்பத்தில் இடம்மாற்றம் என்று கண்டனம்

யாழ்.வலிகாமம் வலயப் பாடசாலைகளில் அதிபர்களுக்குப் பொருத்தமற்ற சந்தர்ப்பத்தில் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளமையினை கண்டித்துள்ள தரம் பெற்ற அதிபர் சங்கம் உடனடியாக அதனை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநரை கோரியுள்ளது.

இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் அன்பு ஜவஹர்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வருட நடுப் பகுதியில் பாடசாலைப் பரீட்சை உட்படப் பாடசாலை வேலைத் திட்டங்கள் திட்டடமிட்டு நடைபெற்று வரும் நிலையில் திடீரென வடமாகாணசபை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் 76 அதிபர்களை இம்மாதம் முதல் இடம்மாற்றம் செய்துள்ளமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறவிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான இடம்மாற்றம் வழங்கப்படுவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.வடமாகாண சபையின் இச் செயற்பாடானது பவாடசாலை நிர்வாகத்திலும்,மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

மேலும் குறித்த அதிபர்களில் கணிசமானவர்கள் க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்பித்து வருவதோடு எவ்விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் உட்படாது பாடசாலை நிர்வாகத்தைச் சிறப்பாக நடாத்தி வருபவர்கள்.திடீர் இடம்மாற்றங்கள் கல்விப் புலத்தைப் பாழ்படுத்தும் நடவடிக்கையாகவுள்ளமையால் வடக்கு மாகாண ஆளுநர் குறித்த விடயத்தில் தலையிட்டு இடம்மாற்றத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றோம்.

உரிய திட்டப் படி நடாத்தப்பட வேண்டிய இடம்மாற்றமாகவிருப்பின் அடுத்த வருடம் ஜனவரி வரை இந்த இடம்மாற்றங்களை ஒத்தி வைத்துத் தகைமை அடிப்படையில் வடமாகாண சநபைவ மேற்கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யாழ்.நகர் நிருபர்-