செய்திகள்

வலி சுமந்த வாரத்தில் எம் உதிரத்து உறவுகளுக்கு உணர்வுகளால் அஞ்சலி செலுத்துவோம் : யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

வலி சுமந்த வாரத்தில் எம் உதிரத்து உறவுகளுக்கு உணர்வுகளால் அஞ்சலி செலுத்த அனைவரையும் உரிமையோடு அழைத்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

இது தொடர்பில் அந்த ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொத்துக் கொத்தாக எம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப் போரின் ஆறாத ரணங்களைச் சுமந்ததாக மீண்டும் எம் கண் முன்னே விரிந்துள்ளது வலி சுமந்து வாரம்.

இழப்புக்களையும், ஈவுகளையுமே நிலையாகப் பெற்ற எம்மினத்தை ஒரே வட்டத்துக்குள் அடக்கித் தொடர்கிறது அடக்குமுறை நெருப்பு.எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இன்றளவும் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் தான் ஆண்டுதோறும் வந்து செல்கிறது வலி சுமந்த வைகாசி.

மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டுப் பெறுவது மனிதத்தனம்.அதைக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம்.ஆனால் நீதி கோரிய எம் உறவுகளை நிற்க வைத்துச் சுட்டதும்,அடைக்கலம் காணாத மக்களை அடக்கி வைத்து அழித்ததுவும் இவ்வுலகு கண்ட ஆறாத கொடுமை.

எம் நெஞ்சிலே விழுந்த இந்தப் பேரிடி ஜென்மங்கள் கடந்தாலும் பரிணாமம் அடையாது எம் சந்ததிகளின் இதயங்களிலே என்றென்றும் இருக்கத் தான் போகிறது.

அந்த வகையில் எம் உறவுகளின் இழப்பினையும், ஈவினையும் தாங்கியதான வலி சுமந்த வாரத்தின் இறுதி நாளினை எங்கள் நெஞ்சத்தில் சுடரேற்றி, அகமுருகி உணர்வுகளால் அஞ்சலிக்கப்பட வேண்டும்.எம் இரத்த உறவுகளை நினைவு கூருவது எமது கடமை.

எமக்காய் மாண்டவர்களை நெஞ்சிருத்துவது எமது உரிமை.

அன்புக்குரிய எமது உறவுகளே!அழுவதற்குக் கூட உரிமை மறுக்கப்பட்டு அடக்கி அழிக்கப்பட்ட எம் சொந்தங்களை நினைந்து சுடர் ஏத்துவோம்.

அந்த வகையிலே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே-18 ஆம் திகதி திங்கட்கிழமை மாபெரும் ஒருங்கிணைப்பாய் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் நினைவேந்தலில் உதிர்க்கப்பட்ட எம் உதிரத்து உறவுகளுக்கு உணர்வுகளால் அஞ்சலி செலுத்த அனைவரையும் உரிமையோடு மாணவர் ஒன்றியம் அழைக்கின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் நிருபர்-

u-1