செய்திகள்

வலி.வடக்கில் இன்னும் சில பகுதிகள் விரைவில் விடுவிப்பு

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து இனங்காணப்பட்ட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் சிலவற்றினையே இதன் போது விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்செவன ஹோட்டல் வரையிலான சில பகுதிகள் இதன் போது விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் போன்றவற்றுடன் கூடிய 109 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவிக்கப்பட்ட காணிகளை கையளித்துச் சென்றிருந்தார்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருந்த காரணத்தினால் அப்பகுதிகளில் சென்று மக்கள் குடியேறுவதற்கு உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த படைமுகாம்களை அகற்றுவதற்கு இராணுவத்தினரால் ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இருந்த போதும் காணிகள் விடுவிப்பதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட மக்கள் தமது காணிகளுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று குடியேறிக் கொள்வது தொடர்பாக படைத்தரப்பினருக்கும் தெல்லிப்பழை பிரதேச செயலருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலின் போது விடுவிக்கப்பட்ட காணிகளில் எதிர்வரும் வார இறுதிக்குள் மக்கள் குடியேறிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்படும் என்று படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இரு பாடசாலைகளையும் இயங்க வைப்பது, மாணவர்களுடைய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்காக நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலைய வேலிகளை பின்னகர்த்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தல்செவன ஹோட்டலுடன் கூடிய பகுதிகளை மக்களிடம் கையளிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளதாக படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வலி.வடக்கின் மேலும் சில பகுதிகள் மிக விரைவில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
n10