செய்திகள்

யாழ் வலி.வடக்கின் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளைப் பகுதி பகுதியாகவே பார்வையிட அனுமதி

யாழ்ப்பாணம் வலி.வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சுமார் 570 ஏக்கர் காணிகளை நேற்று சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட போதும் பகுதி பகுதியாகவே மக்கள் காணிகளைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றனர்.

வலி.வடக்கில் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 570 நிலப் பரப்பு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் யாழ்.மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு ஒப்படைக்கப்படும் பகுதிகள் தொடர்பில் ஆராயப்பட்ட பின்னர் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்திற்குள் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலி.வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை மக்கள் இன்று பார்வையிட முடியும் என யாழ்.மாவட்டச் செயலகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமது காணிகளைப் பல வபருடங்களின் பின்னர் பார்வையிடும் ஆவலுடன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்தனர்.ஆனால் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதியாகவே மக்கள் காணிகளைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் மக்களில் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றனர். வருகை தந்திருந்த மக்களில் பலர் தமது காணிகளை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கப்பால் நின்று பார்த்து விட்டு மனவிரக்தியுடன் வீடு திரும்பினர்.

வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அறிவித்திருந்தது.இதன் பிரகாரம் அண்மையில் வளலாய்,வசாவிளான் மற்றும் பலாலி தெற்குப் பகுதிகளில் 430 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

vali_north_08

vali_north_05