செய்திகள்

வலி.வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட மூன்று வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு முறைப்பாடு

வலி.வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட மூன்று வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு யாழ்.தெல்லிப்பழை வித்தகபுரம் மக்கள் பிரதேச சபைக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

பரந்த கலட்டி-பொற்கலன் தம்பை வீதி,கொல்லங்கலட்டி-சீராவளை ஊடான கருகம்பனை வீதி,பெரியாவுடை-கைராசி மொந்தல் சடச்சப்பை வீதி ஆகிய மூன்று வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு சுமார் 75 பேர் கையொப்பமிட்டுக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு நாங்கள் மீளக்குடியமர்ந்த போது இந்த வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் கனரக வாகனங்கள் கல்,மண் அகழ்தல் என்பவற்றுக்குச் சென்று தற்போது மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளன. தற்போது பெய்த சிறுமழையின் போது கூட மக்கள் வீதியால் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.பாடசாலை செல்லும் எமது பிள்ளைகள் இரண்டு கிலோ மீற்றர் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளது.விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த துவிச்சக்கர வண்டியிலோ,மோட்டார்ச் சைக்கிளிலோ செல்ல முடியாது அவற்றை உருட்டிச் செல்ல வேண்டியுள்ளது.

பரந்தகலட்டி-பொற்கலன் தம்பை வீதி புனரமைக்கப்படும் போது 250 மீற்றர் புனரமைக்கப்படாது விடப்பட்டுள்ளது.இது தொடர்பில் பலமுறை மதிப்பீடு செய்தும் செப்பனிடப்படவில்லை.

கொல்லங்கலட்டி-சீராவளை ஊடான சகருகம்பனை வீதிக்கு இடைப்பட்ட 150 மீற்றர் புனரமைப்புச் செய்யப்பட்டு 1.5 கிலோ மீற்றர் வீதி புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் கல் அகழ்தல்,மண் அகழ்தல் ஆகியவற்றில் ஈடுபடும் வாகனங்கள் சென்று வருகின்றன.

பெரியாவுடை-கைராசி மொந்தல் சடச்சப்பை வீதி ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை செப்பனிடப்படாதுள்ளது.இவ் வீதியை மாணவர்கள்,உத்தியோகத்தர்கள்,விவசாயிகள் எனப் பலரும் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே,குறிப்பிட்ட வீதிகளை மழை காலத்திற்கு முன்பு புனரமைப்புச் செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் நிருபர்-