வலி வடக்கு, சம்பூர், கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணிலுடன் கூட்டடைப்பு பேச்சு
வலி வடக்கு மற்றும் சம்பூர் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
பாராளுமன்றக்கட்டத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சோதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் 1,100 ஏக்கர் நிலத்தை பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், 660 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இதன்போது பிரதமருக்குச் சுட்டிக்காட்டினார்கள்.
மீள்குடியேற்ற அமைச்சர் எதிர்வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் வலியுறுத்தினார்கள். விடுவிக்கப்படாத காணிகள் விடுவிக்கப்படுவதுடன், அவற்றை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக குறிப்பிட்ட பகுதி இராணுவ அதிகாரிகளையும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
இதனைவிட சம்பூர் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இங்குள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதால், அது முழுமையாக இடம்பெறும் வரையில் காத்திருக்காமல் பகுதி பகுதியாக சில இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தீர்க்கப்படாதததாக இருப்பதால், அதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய அசியத்தையும் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இதற்காக அடுத்த வாரம் சட்டமா அதிபரைச் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.