செய்திகள்

வலி.வடக்கு மக்களின் அகதி வாழ்வு மைத்திரி ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா?

சொந்த நிலமிருந்தும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழும் வலிகாமம் வடக்கு மக்களின் அகதி வாழ்க்கை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா? என்று வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழு கேள்வியெழுப்பியுள்ளது.

நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கின்ற வலி. வடக்கு மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவோம் எனக் கடந்த கால அரசாங்கங்கள் போன்று இந்த அரசும் குறிப்பிட்டளவானோரை மீளக்குடியமர்த்திவிட்டு ஏனையோரை மீளக்குடியமர்த்துவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் மேற்படி குழுவின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்களினது வீடுகளிலும் வலி. வடக்கு மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த மக்களில் குறிப்பிட்டளவானோர் கடந்த ஆட்சிக் காலத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர். அதேபோன்று ஏனையோரும் மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என்று கூறியபோதும் அவ்வாறு மீள்குடியேற்றம் ஏதும் நடைபெறாத நிலையே இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீள்குடியமர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வலி. வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது. இதற்கமைய முதற்கட்டமாக ஆயிரம் ஏக்கரை விடுவிப்பதாகவும் தொடர்ந்து ஏனைய பகுதிகளை விடுவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் ஆயிரம் ஏக்கரை விடுவித்ததோடு மட்டும் அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நின்றுவிட்டதாகவே தெரிகின்றது. இதற்குப் பின்னர் காணிகளை விடுவித்து மக்களை மீளக் குடியமர்த்தும் எந்தவித நடவடிக்கைளும் உரியவகையில் மேற்கொள்ளப்படாத நிலையே இருக்கின்றது. இதனால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அந்த மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதாவது மீள்குடியேற்றம் செய்வதாக கடந்தகால அரசாங்கங்கள் போன்று இந்த அரசும் ஏமாற்றிவிடுமா? இந்த அரசும் மீள்குடியேற்றாது விட்டால் மீள்குடியேற்ற நிலைமைகள் என்னவாகும் என்ற கேள்விகளை மக்கள் எழுப்பியிருக்கின்றனர்.

ஆகவே கடந்த காலங்களைப் போலல்லாது மைத்திரி ஆட்சிக்காலத்திலேயே மீள்குடியேற்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டுமென்று கோருகின்றனர். இதனை புதிய ஜனாதிபதி செய்வார் என்று நம்பியிருந்த மக்களின் நம்பிக்கையை கெடுக்காது விரைந்து நடவடிக்கை எடுத்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் சொந்த நிலத்தில் குடியமர்த்த வேண்டுமென மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.