செய்திகள்

வலி வடக்கு மீள்குடியேற்றத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சர் சுவாமிநாதனிடம் வடக்கு முதல்வர் நேரில் கோரிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்துக்குள் இதனையும் உள்ளடக்கி இதற்கான செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைச்சர் சுவாமிநாதனை இன்று அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியபோதே வடக்கு முதலமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். வடக்கு முதலமைச்சருடன், வடமாகாண சபையின் அமைச்சர்களான டெனீஸவரன், குருகுலராஜா ஆகியோரும்  உடனிருந்தார்கள்.  இச்சந்திப்பின் போது, வடபகுதியில் வலிகாமம் வடக்கில் காணப்படும் நிலைமை தொடர்பாகவே விக்கினேஸ்வரன் முக்கியமாக மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

வலிகாமம் வடக்கில் சுமார் 6,500 ஏக்கர் நிலம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதில் இராணுத்தினரின் தேவைக்குரிதாக இனங்காணப்படும் அல்லது தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேறி மீள்குடியேற்றத்துக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தார். அதாவது சுமார்  5 ஏக்கரில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அரசாங்னம் தன்னுடைய 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் இதனை உள்ளடக்கிச் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சுவாமிநாதன், வலிகாமம் வடக்குப் பகுதி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். அகதிகளாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களை மீள அழைபபது உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.