செய்திகள்

வலுவான நீதித்துறையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியும்: மங்கள

இலங்கையில் வலுவான நீதித்துறையொன்றை ஏற்படுத்துவது போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொள்வதற்கு உதவும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறையானது, தகைமையைக் கொண்டதாகவும் சுதந்திரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உலகத்திற்கு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக அவர் தெரிவித்திருப்பதாக சின்குவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

“கடந்த வருடம் சர்வதேச விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அது இப்போது பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது. இந்த விசாரணையின் பெறுபேறுகள், இலங்கையின் ஆயுதப்படைகளும் ஏனைய பொது மக்களும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராவதற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும்.

நீதித்துறையின் நம்பகத்தன்மையை மீள நிலைநாட்டுவதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுக்காவிடின் இதற்கு வழிவகுக்கும். நம்பகரமான உள்நாட்டு விசாரணையை ஏற்படுத்துவதற்கு முன்னைய நிர்வாகம் தவறியிருந்தது. அதனால் தற்போதைய நெருக்கடிகளுக்கு அது வழிவகுத்திருக்கிறது என்று சமரவீர கூறியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடைகள் மேற்கொள்ளப்படாமலும் அவமதிப்பு ஏற்படாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவது சவாலாக காணப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சர்ச்சைக்குரிய பிரதம நீதியசரர் மொஹான் பீரிஸ் அகற்றப்பட்டதை அமைச்சர் சமரவீர நியாயப்படுத்தியுள்ளார். நீதித்துறை செயற்பாட்டில் சர்வதேச தரத்தை மீறும் வகையில் அவர் செயற்பட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.