செய்திகள்

வலைத்தள கட்டுரையாளர்களுக்கு புகலிடம் தர அமெரிக்கா பரிசீலனை

வங்காளதேசத்தில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக வலைத்தளங்களில் எழுதுகிற கட்டுரையாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வலைத்தள கட்டுரையாளர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2 தினங்களுக்கு முன்பு டாக்காவில் மதச்சார்பற்ற கருத்துகளை வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த சட்ட மாணவர் நஜிமுதீன் சமத் படுகொலை செய்யப்பட்டார்.

வங்காளதேசத்தில் வலைத்தள கட்டுரையாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது உலக நாடுகளில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் பேட்டி அளித்தார். அப்போது அவர், “அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வலைத்தள கட்டுரையாளர்களுக்கு மனிதாபிமான பாதுகாப்பு வழங்கலாம். அவர்களுக்கு அடைக்கலம் தரலாம். இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிசீலிக்கும்” என கூறினார்.

நஜிமுதீன் சமத் குடும்பத்தாருக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது. மேலும் மார்க் டோனர் கூறும்போது, “தீவிரவாதம், வன்செயல்களுக்கு எதிரான வங்காளதேசத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்” என்று குறிப்பிட்டார்