செய்திகள்

வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டது: கூட்டமைப்பு உள்மோதல்களின் எதிரொலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த வல்வெட்டித்துறை நகரசபை இன்று வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாவட்ட நீதிபதி மா.அருமைநாயகம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே வல்வெட்டித்துறை நகர சபை கலைக்கப்பட்டதாக முதலமைச்சரின் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி நகர சபைத் தலைவராக அனந்தராஜ் நியமிக்கப்பட்டபோதிலும் நகரசபை உறுப்பினர்களின் முரண்பாடுகளால் நகரசபை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. நகர சபையில் ஊழல் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில் நகரசபைத் தலைவரால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டன. ஊழல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணையை நடத்துவதற்காக தனிநபர் ஆணையம் ஒன்று முதலமைச்சரால் நியமிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட நீதிபதி மா.அருமைநாயகம் இந்த விசாரணைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

அவரது அறிக்கை சில வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே நகரசபையைக் கலைக்கும் முடிவை முதலமைச்சர் எடுத்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகர சபை கலைக்கப்பட்டுள்ளதால் அடுத்த தேர்தல் வரை செயலாளரின் மேற்பார்வையில் நகர சபை செயற்படும்.