செய்திகள்

வவுனியாவில் ஆதிவாசிகளுக்காக திரண்ட மக்கள்

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற ஆதிவாசிகளுடனான கிரிக்கெட் போட்டி மற்றும் அவர்களது கலாசார நடனம் என்பன மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களான கே.வசந்தன் மற்றும் பா.சதீஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா, யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று காலை முதல் மாலை வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழு தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணி, பொலிஸ் அணி, முல்லைத்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக அணி, மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் அணி என்பவற்றுக்கும் இடையில் பரபரப்பான முறையில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.

இதில் வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட அணி முதலாமிடத்தையும், முல்லைத்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக அணி இரண்டாம் இடத்தையும், ஆதிவாசிகளின் அணஜ மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

தமது கலாசார உடைகளுடன் மைதானத்தில் ஆதிவாசிகள் விளையாடியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர். போட்டி நிறையில் அவர்களது விசேட மத வழிபாடு மற்றும் நடன நிகழ்வும் இடம்பெற்றது. இதனைக் கண்டு களிக்க பெருமளவிலான மக்கள் வருகைதந்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா நகரசபைச் செயலாளர் இ.தயாபரன், சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0107 DSC_0087 (2) DSC_0088 DSC_0090 (1) DSC_0098 (1)

N5