செய்திகள்

வவுனியா கோவிலில் கோட்டல் முறையில் உணவு வழங்கப்பட்டது: இந்து ஆர்வலர்கள் விசனம்

வவுனியாவில் குருமன்காட்டுப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் அன்னதானத்திற்கு கோட்டலில் வழங்கப்படுவது போன்று நவீன முறையில் பொதி செய்யப்பட்ட பாசல்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் இந்து ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் குருமன்காட்டில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் நேற்று கொடியேற்ற திருவிழாவின்போது அன்னதானத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் வாழை இலை அல்லது தாமரை இலை போட்டு வழங்கப்படவேண்டிய அன்னதானம் எனப்படும் மகேஸ்வரபூஜையின் பின்னரான பிரசாதம் கலாசாரத்திற்கு முரணான முறையில் உடனடி பொதி செய்யும் பெட்டில் இடப்பட்டு அரசியல் கூட்டங்களில் வழங்கப்படுவது போன்று வழங்கப்பட்டுள்ளது.

கலாசார மண்டபம் உட்பட இட வசதிகள் கொண்ட இக்கோவிலில் இவ்வாறான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளமை இந்து கலாசாரத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே இது தொடர்பில் வவுனியா மாவட்ட நலாசார உத்தியோகத்தர் மற்றும் இந்து அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோத்தரிடம் கேட்டபோது, இவ்வாறு அன்னதானம் வழங்கப்படுவதை முதன் முதலாக நான் கேள்ளிப்படுகின்றேன். இது எமது பாரம்பரியத்திற்கு முரணானதாகவே நான் பார்க்கின்றேன். இது தொடர்பில் எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் ஆலயத்தின் தொலைபேசியுடன் தொடர்புகொண்டேன் எனினும் எவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.