செய்திகள்

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை தயார் படுத்தும் நோக்கில் மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெற்ற போது பான்ட் வாத்தியத்துடன் அணிவகுப்பு பயிற்சியும் இடம்பெற்றுள்ளது.

பான்ட் வாத்திய அதிர்வால் பாடசாலை மைதானத்தின் அருகில் அமைந்திருந்த கட்டடத்தின் கூரையில் இருந்த குழவிகள் பறந்து வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியுள்ளது. இதன் காரணமாக நான்கு ஆசிரியர்களும் மூன்று மாணவர்களும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாகாணசபை தேர்தலின் போது இப் பாடசாலையில் தேர்தல் கடமைக்காக வந்த உத்தியோகத்தர் ஒவர் குழவி கொட்டியதில் மரணமடைந்தமையும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது இப் பாடசாலையில் குழவிகள் அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலையில் முன்னர் இருந்த குழவிகள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த இரு விடுமுறை நாட்களுக்குள்ளேயே மேற்படி குழவிகள் தமது பாடசாலை கட்டடத்தில் வந்து சேர்ந்துள்ளன எனவும் அவையே மாணவர்களும், ஆசிரியர்களும் மைதானத்தில் பான்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்ட போது கொட்டியதாகவும் பாடசாலை அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.