செய்திகள்

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி: வட மாகாண சுகாதார அமைச்சர்

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி அடைந்துவிட்டது என்றும் விரைவில் வவுனியா நகருக்கு முழுமையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் தியாகி அறக்கொடை அமைப்பால் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்க தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அவ்வாறான நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு பலவேறு அபிவிருத்திகளை செய்துள்ளோம். அந்தவகையில் 240 மில்லியன் ரூபாவில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து விசேட சிகிச்சை நிலையமொன்றினை அமைக்கவுள்ளோம்.

இது மாத்திரமின்றி வட மாகாணத்தில் பல வைத்தியசாலைகளின் தேவைகளும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் எமது மாகாணத்தில் நிலத்தடி நீரில் இரசாயன பொருட்களை பயன்படுத்துவதனால் கிருமிகளுக்கு மேலதிகமாக இரசாயன பதார்த்தங்களும் பெருவாரியாக உள்ளதை அவதானிகக் முடிகின்றது. ஆகவே தற்போது வட மாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் பேராறு குடிநீர்த்திட்டம் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. அதில் 60 வீதமான திட்டம் முடிவடைந்துள்ளது. எனவே வெகு விரைவில் வவுனியா நகரம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த திட்டத்திற்கு பின்னால் பல விவசாயிகளின் கண்ணீர் இருந்தபோதிலும் தற்போது அது தூய்மையான திட்டம் என்ற வகையில் விவசாயிகள் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து தமது விவசாய நிலங்களை தற்போது விட்டுக்கொடுத்துள்ளார்கள்.

அது போலவே யாழ்ப்பாணத்திலும் நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அது போலவே நிலத்தடி நீரை காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையின் மலக்கழிவுகளை உரிய முறையில் அகற்றவேண்டிய தேவையுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் யுனொப்ஸ் என்ற அமைப்பு 230 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளது. அத்திட்டம் 2016 ஆம் அண்டு நிறைவடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.