செய்திகள்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் பேசுவார்: ஆனந்தன் எம்.பி

வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத் தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளதாக வன்னிப்பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, எம்.பி.நடராஜா, இ.இந்திராசா, வடமாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ, வர்த்தக சங்க பிரதிநிதிகளான த.இராசலிங்கம், புலேந்திரன் ஆகியோர் இன்று (25.04) வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து குறித்த குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிதி திரும்பிச் செல்லாது, வவுனியா மாவட்டத்திலேயே பயன்படுத்தப்படும் என தெரிவித்த முதலமைச்சர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா அவர்களை சந்திக்கும் போது ஓமந்தையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஓமந்தையில் இப் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது விரும்பமா என முதலமைச்சர் வினவியதாகவும் அதற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

N5