செய்திகள்

வவுனியா மன்னகுளத்தில் இறந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு (படங்கள்)

வவுனியா மன்னகுளம் பிரதேசத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய சிறுமியான செ. சரண்யாவின் சடலம் இன்று (6.4) மதியம் தோண்டியெடுக்கப்பட்டது.

பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா மன்னகுளத்தில் வசித்து வந்த செ. சரண்யா என்ற சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் இச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பொப்பரவரி மாதம் 28 ஆம் திகதி மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்திற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸாரினால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதமும் 8 நாட்களும் கடந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதவான் முகமட் ரிஸ்வான் மற்றும் யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மதியம் 2.30 மணியளவில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களிடம் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

s0

s1

s2

s3

s4