வாகரையில் இந்திய உதவி வீடுகள் கையளிப்பு: கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை பயளனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட வீடுகளின் முதல் தொகுதி வீடுகள் இன்று புதன்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மட்டுமே முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான உயர் ஸ்தாஇந்தியனிகர் வை. கே. சிஹ்கா கலந்து கொண்டு வீடுகளையும் அது தொடர்பிலான சட்ட ரீதியான ஆவணங்களையும் கையளித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 270 மில்லியம் அமெரிக்க டாலர் செலவில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்திய ஏற்கனவே முன் வந்துள்ளது.
குறித்த வீடுகளில் 4000 வீடுகள் கிழக்கு மாகாணத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வீடமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய நிகழ்வில் இரு பயனாளிகளுக்கு வீடுகளையும் 25 பேருக்கு அது தொடர்பான ஆவணங்களையும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கையளித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சிஹ்காவுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் , மாவட்ட அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.