செய்திகள்

வாகரை பிரதேச மக்கள் பனிச்சங்கேணி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தை நிறுத்தக்கோரி, இன்று திங்கட்கிழமை வாகரை பிரதேச வாவிக்கரையோர மக்களினால் வாகரை திருமலை வீதியிலுள்ள பணிச்சங்கேணி பாலத்தில் போக்குவரத்தை தடைசெய்து வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் வாகரை ஊடாக திருகோணமலைக்கான போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் தடைப்பட்டது.

இத் திட்டமானது அமுல்படுத்தப்படும் போது வாகரை பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தாவரங்கள் அழிதல், களப்பு நீர் மாசுபடுதல், களப்பு மீன் பிடித் தொழில் பாதிக்கப்படுதல், மீன், நண்டு, இறால் இனப்பெருக்கம் தடைப்படுத்தல், அயல் பிரதேச நிலங்கள் உவர் தன்மை அடைதல், விலங்கு வளர்ப்பு பாதிக்கப்படுதல், வாவி நீர் மட்டம் குறைதல், பல்லினத் தன்மையின் நிலவுகைக்கு பாதகமாக அமைதல் போன்ற தீமையான விடயங்கள் காணப்படுவதன் காரணமாக இத்திட்டத்தை உடன் நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் ஆகியோரிடம் இத்திட்டத்தை நிறுத்தக்கோரி எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை வழங்கப்படும் பட்சத்திலேயே இவ்விடத்தை விட்டு கலைந்து செல்வதாக ஆர்;பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், ‘குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தித்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்திலும் சுட்டிக்காட்டப்படும். மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்வதுடன், எதிர்க்கட்சி தலைவரிடமும் இவ்விடயம் தொடர்பாக தகவல வழங்கி, குறித்த திட்டத்;தை நிறுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்’ என்று தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

 

n10