செய்திகள்

வாக்காளர்களைத் திசைதிருப்ப புதிய முயற்சி: போலி வாக்குச் சீட்:டு, போலி விளம்பரங்கள்

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளைத் திசைதிருப்பும் நோக்குடன் போலியான பிரசாரங்களை அரசாங்கத் தரப்பினர் இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக முச்சக்கரவண்டியும், சிறிதுங்க ஜெயசேகரவின் பெயருக்கு நேராக யானை சின்னமும் போடப்பட்டுள்ளது.

இந்த வாக்குசீட்டில் மகிந்த ராஜபக்சவின் பெயருக்கு அருகில் இருக்கும் வெற்றிலை சின்னம் மாத்திரம் புள்ளடியிடப்பட்டுள்ளது. இதனை விநியோகித்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

மைத்திரிபால சிறிசேன அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவதால் வாக்காளர்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், மைத்திரிபால சிறிசேனவின் தோற்றத்தையொற்ற மற்றைறொருவரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். சிறிசேனா என்ற பெயருடைய அவர் கொடி சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவரது விளம்பரங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருந்தன.