செய்திகள்

வாக்குகளால் மாற்றத்தை ஏற்படுத்தினோம் என்கிறார் முதல்வர் விக்கினேஸ்வரன்

இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்கப் போகும் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வர வேண்டியிருக்கும் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் வெளிநோயாளர் பிரிவு ஒன்றிணை புலம்பெயர் தமிழர் ஒருவரின் உதவியுடன் அமைத்து குறித்த பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித் திருக்கின்றார்.

நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான விபரம்:

“இன்றைய தினம் நான் நெடுந்தீவு செல்வதாக இருந்தது. சில, பல காரணங்களினால் அந்தப் பயணத்தை அடுத்த கிழமைக்கு மாற்ற வேண்டியிருந்தது. மாற்றிய சிறிது நேரத்தில் அனலைதீவு வர முடியுமா என்று என்னிடம் எங்கள் வைத்தியத்துறை அமைச்சர் கேட்டார். “அதற்கென்ன” என்றேன்.

எனவே இன்றைய தினம் இந்திய சமுத்திரத்தில் நிலை கொண்டிருக்கும் இலங்கைக்குச் சொந்தமான ஏதாவது ஒரு தீவில் நான் காலடி வைக்கவேண்டும் என்பது எனது விதி. ஆனால் அந்த விதியை மாற்ற மேன்மைதகு ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளர் நேற்று பின்நேரம் நடவடிக்கைகள் எடுக்கப்பார்த்தார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க வருமாறு கோரினார். இன்று இங்கு வர இருப்பதைக் குறிப்பிட்டு அடுத்த கிழமைக்கு ஜனாதிபதி சந்திப்பை பின்போட்டு விட்டேன்.

இன்று உங்கள் மத்தியில் வந்து உங்களையெல்லாம் காணக் கிடைத்ததை ஒரு பேறாகக் கருதுகின்றேன். காரணம் கொழும்பில் பிறந்து வளர்ந்த ஒருவர் ஏதாவது ஒரு முக்கிய காரணத்தை ஒட்டித்தான் படகேறி உங்கள் தீவுக்கு வரச் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்பேர்ப்பட்ட ஒரு சந்தர்ப்பம் நான் அரசியலில் சேராதிருந்தால் எனக்குக் கிடைத்திருக்காது.

எனினும் நான் அரசியலுக்கு வந்ததால் நீங்கள் எனக்களித்த வாக்குகளின் மூலம் நீங்கள் யாவரும் எனக்கு வேண்டியவர்களாக மாறியுள்ளீர்கள். தேர்தல் காலங்களில் அரசியல் ரீதியாக நாங்கள் பிரிந்திருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நாங்கள் யாவரும் ஒரு குடும்பத்தவர் போல் ஆகிவிட்டோம். இந்தக் குடும்ப உறவுமுறை தான் வைத்திய கலாநிதி குமாரசாமி கிருபானந்தனை இந்த வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தைக் கட்டி வைக்க உதவியது.

கனடாவில் வசிக்கும் அவர் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒரு வெளிநோயாளர் பிரிவைக் கட்டி உங்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டு, அது சம்பந்தமான அபிவிருத்திக் குழுவில் பணியாற்றி வந்துள்ளார் என்றால் தான் பிறந்த மண்ணையும் தன் மக்களையும் தன் உறவுகளையும் அவர் மறக்கவில்லை என்று அர்த்தம்.

உறவுகளுக்கு உதவி புரியும் இந்த நல்ல பழக்கம் எமது புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் மேலோங்கி வர இறைவன் அருள் புரிய வேண்டும். இன்று வடகிழக்கு இலங்கையானது ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. எமது வாக்கினால் இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த நாங்கள் தற்பொழுது எமது வாக்கினால் அதைச் சாதித்திருக்கின்றோம் எனப்படுகின்றது.

எமது வாழ்க்கை முறையில் இனி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்கப் போகும் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வர வேண்டியிருக்கும் என்பது எனது கணிப்பு.

நெருக்குதல்கள், தேவைகள் இருந்தால்த்தான் எம்மை நாடித் தேடி நலங்கள் பல கொழும்பில் இருந்து வரக் கூடும் என்பதும் அவை அற்ற நிலையில் “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்குத் தள்ளப் படக் கூடும் என்ற ஒரு எண்ணமும் எழாமல் இல்லை.

அதனால்த்தான் எமது புலம் பெயர்ந்த இரத்த உறவுகள் எமக்கு உறுதுணையாக இருந்து எம்மை கையேற்றி விட முன்வர வேண்டும் என்று கூறுகின்றேன். அதே காரணத்தினால்த் தான் வைத்திய கலாநிதி திரு.குமாரசாமி கிருபானந்தன் போன்றோரின் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து எமது அல்லல் துடைக்க அவை உதவி புரிய வேண்டும் என்று அறை கூவிக் கூறுகின்றேன்.

உதவிப் பணிகள் நடைபெறும் போது அவை தான்தோன்றித் தனமாகவும் நடைபெறலாம் நாம் தோன்றித்தனமாகவும் நடைபெறலாம்.

அதாவது எமது வடமாகாணத்திற்கு எவையெவை தேவை, என்னென்ன விதத்தில் அத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், எந்த அளவுக்குப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விடயங்களை நாம் யாவரும் சேர்ந்து கணித்து நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள விழைவது நாம்தோன்றித்தனம். தனியொருவர் தனக்கு வேண்டியதைத் தனித்துவமாகக் கலந்துரையாடல் அற்று செய்து கொடுப்பது தான்தோன்றித்தனம்.

இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பல நாட்களாக நாங்கள் யாவரும் வேண்டி நின்ற ஒரு தேவை. அதைப் பூர்த்தி செய்துள்ளார் வைத்திய கலாநிதி கிருபானந்தன் அவர்கள்.

எமது வைத்தியத் துறை அமைச்சருடன் கலந்துறவாடியே இக் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நாம் எமது வடமாகாணத்தை திட்டமிட்டே முன்னேற்ற வேண்டும்.

அரசாங்கம் இதுவரை காலமும் கொடுத்ததை விடக் கூடிய செலவுகள் எம் சார்பில் கையளிக்க முன்வந்தாலும் எமக்கிருக்கும் தேவைகள் பல மடங்கானவை.

நாங்கள் ஒரு கொடிய போரின் பிடிகளில் இருந்து விடுபட்டு வந்தவர்கள். எமக்கான தேவைகள் நாட்டின் மற்றைய இடங்களில் காணப்படும் மற்றைய தேவைகளிலும் இருந்து வேறு பட்டு இருக்கலாம்.

வேறுபட்டவை. இவற்றை எல்லாம் கணித்து எப்பேர்ப்பட்ட அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும் என்று கோருவது எமது வடமாகாண சபையையும் எமது அலுவலர்களையுஞ் சேர்ந்த ஒரு பணி என்பதை நான் உணர்கின்றேன்.

விரைவில் தேவைகள் சார்ந்த ஆராய்வு நடை பெற்று வடமாகாணத்திற்கென ஒரு திறமைத் திட்டம் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். எமது புலம் பெயர்ந்த உறவுகள் அந்தத் திறமைத் திட்ட அடிப்படையில் எமது தேவைகளைப் ப+ர்த்தி செய்ய முன்வர வேண்டும்.

நான் வெளிநாடுகளுக்குப் போன காலங்களில் பலர் என்னிடம் எடுத்துக் கூறியது தாம் செலவு செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால் தாம் செலவுக்குத் தரும் பணம் மக்களைப் போய் அடைகின்றனவா மத்தியில் உள்ளவர் மடியை நிரப்புகின்றனவா என்பதில் தமக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாக. இது உண்மை.

பல சந்தர்ப்பங்களில் உரியவர்களுக்கு உதவிகள் சென்றடைவதில்லை. மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய நாங்கள் கட்டுப்பாடுள்ள கட்டுமானங்களை கருத்துடன் உருவாக்க வேண்டும்.

அண்மையில் எமது அமைச்சர்கள் இருவர் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் செய்த வெள்ள நிவாரணப் பணிகள் எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. நடுவில் இருந்து கடத்திச் செல்லாமல் மக்கள் நலம் விரும்பி நல்ல முறையில் நலக் கொடுப்பனவுகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

எமது வடமாகாணசபை உறுப்பினர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். விரைவில் அவர்கள் ஒவ்வொருவருக்கும், (எனக்குந் தான்) தலா அறுபது இலட்சம் மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படும். திட்டமிட்டு மக்கள் நலம் கருதி ஒவ்வொரு சதமும் பாவிக்கப்பட நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அனலைதீவின் அபிவிருத்தியில் கரிசனை கொண்ட யாவரும் ஒருங்கிணைந்து உங்கள் பிரதேச சபையினூடாக அல்லது மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாக எமக்கு உங்கள் தேவைகளைத் தெரியப்படுத்துங்கள்.

முக்கியமாகத் தெருக்கள், பாடசாலைகள், ஆலயங்கள், கிணறுகள், நீர்நிலைகள் போன்றனவற்றைப் புனர் அமைக்கத் தேவையான செலவுகள் பற்றி எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

புதிதாகத் தொடங்கக் கூடிய கைத்தொழில்கள் பற்றி அறிவியுங்கள். உள்ள+ர் போக்குவரத்து பற்றி அறிவியுங்கள். எமது மாகாணத்தின் தேவைகள் பற்றிய திறமைத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் அலகினால் எப்பொழுது செய்து முடிக்கப்படுமோ தெரியாது. ஆனால் உங்கள் உடனடித் தேவைகளை நீங்கள் தெரியப்படுத்தினால் எம்மால் முடிந்தவற்றை நாங்கள் சாதிப்போம். இல்லையேல் வைத்திய கலாநிதி கிருபானந்தன் போன்றோரின் உதவிகளை நாடி உகந்தவற்றை உருவாக்க எத்தனிப்போம்.

உங்கள் தீவு அழகான தீவு. இங்கு நீங்கள் தனித்திருந்து வாழ்வதால் நன்மைகளும் உண்டு சில பின்னடைவுகளும் உண்டு. தனிமை உங்களை தனித்துவமாக அமைதியான சூழலில் அன்புடனும் அரவணைப்புடனும் வாழ வழிவகுக்கின்றது.

இங்கு இருப்பவர்கள் சராசரி 80 வயதுக்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள் என்று கூறப்பட்டது. தள்ளியிருந்து வாழ்வதால் வடமாகாண நீரோட்டத்தில் முழுமையாக நீந்தி எழுந்து வாழ முடியாதுள்ளது.

ஆனால் அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. உங்கள் பிரதிநிதிகள் மூலம் எங்களுடன் தொடர்பாய் இருங்கள். வேண்டியவற்றைக் கேளுங்கள். நீங்கள் கேட்பதை நாங்கள் தந்ததன் பின்னர் எங்களை அழைத்து விருந்து வையுங்கள்!

உலகமானது இன்று சுருங்கி வருகின்றது. இப்பொழுது கூட உங்கள் வெளிநாட்டு உறவுகளுடன் கைத்தொலைபேசியில் பேசக்கூடியதாக இருக்கின்றது. அந்த அளவுக்கு நாங்கள் அண்மை அடைந்துள்ளோம். கிட்டிய தூரத்திற்கு நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம்.

வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்கள் எம் கிராமங்கள் சிலவற்றை அடையாளம் கண்டு அவற்றை அபிவிருத்தி செய்யும் ஒரு வழிமுறை இப்பொழுது பேசப்பட்டு வருகின்றது.

முன்னர் புலிகள் இருந்த காலத்தில் கூட முல்லைத்தீவில் இப்பேர்ப்பட்ட ஒரு வழிமுறை அமுலில் இருந்தது. வெளிநாடுகளில் எங்கெங்கே எமது மக்கள் பெருவாரியாக வாழ்கின்றார்களோ அவர்கள் தமது அந்நாடுகளில் இருக்கும் உள்ளூர் ஆட்சி மன்றங்களின் ஊடாக இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்த முனையலாம்.

ஆக மொத்தம் மிகக் குறுகிய காலத்தில் எமது வடமாகாணம் சகல விதத்திலும் முன்னேற நாங்கள் வழிவகுக்க வேண்டும். கணணிப் பயிற்சி முறைகள், கணணிப் பாவனை போன்றன எம்மை வந்தடைய வழிசெய்ய வேண்டும். நாளைய தினம் நமக்கே உரியது என்ற நல்ல செய்தியை உங்களுக்குப் பறைசாற்றிக் கூறிக்கொள்கிறேன் என்றார்.