செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்: சோபிதர் எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நீதிக்கான சமூக அமைப்பின் தலைவரான மாதுலுவாவே சோபித தேரர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகித்த சோபித தேரர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்பன அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விடயங்கள்” எனத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, இந்த விடயங்களே முக்கிய வாக்குறுதிகளாக வழங்கப்பட்டன. எனவே பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் இவற்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்” எனவும் சோபித தேரர் வலியுறுத்தினார்.