செய்திகள்

வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன: ஐ.ம.சு.மு. கூட்டத்தில் மைத்திரி

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்குகளை வழங்கி ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளதாகவும், அந்த நம்பிக்கையை கடுகளவேனும் சிதறடிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த 40 வருடங்களாக காணப்படும் ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வாதிகாரத்தை நோக்கி எவரும் செல்வதைத் தடுப்பதற்கான 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு, பாராளுமன்றத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்க வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.