செய்திகள்

வாழும் கலையுலக மேதை நடிகர் சசி கபூர்! இந்திய ஜனாதிபதி புகழாரம்

தாதா சாஹேப் பால்கே விருது பெறும் பாலிவுட் நடிகர் சசி கபூர், வாழும் கலையுலக மேதை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, 62-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறினார்.

பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர் (77), உடல்நலக் குறைவு காரணமாக விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

விருதுக்காக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் விருதை, மூன்றாவது முறையாக சசி கபூரின் குடும்பம் பெறுகிறது.

இதற்கு முன்பு, சசி கபூரின் தந்தை பிருத்விராஜ் கபூர், சகோதரர் ராஜ்கபூர் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இந்தியத் திரையுலகுக்கு பெரும்பங்காற்றிய அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலையுலக மேதையான சசி கபூர், உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைத் தொடர்ந்து, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், “பல சிறந்த ஹிந்தித் திரைப்படங்களயும், சர்வதேசத் திரைப்படங்களையும் தயாரித்து, இந்திய சினிமாவில் சிறப்பாக பங்காற்றியவர் சசி கபூர்’ என்றார்.

சசி கபூருக்கான விருது, அவருடைய வீட்டுக்குச் சென்று அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.