செய்திகள்

விக்கினேஸ்வரனும் வரதராஜப்பெருமாளும் யாழில் சந்தித்துப் பேச்சு

வடக்குக் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை நேற்று வெள்ளிக்கிழமை (17.04.2015) நண்பகல் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய வரதராஜப் பெருமாள் இன்று சனிக்கிழமை மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ் நடத்தும் கூட்டமொன்றில் உரையாற்றுகிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் வைமன் வீதியிலுள்ள ஆறுதல் அமைப்பின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் ‘முதலமைச்சராக எனது அனுபவம்’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.அதைத் தொடர்ந்து அவ்விடயத்தையொட்டிய கலந்துரையாடலும் இடம்பெறும்.

இந்திய அரசின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள வரதராஜப் பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார். அவர் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் இரகசியச் சந்திப்புக்களையும் நடாத்தியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.நகர் நிருபர்-