செய்திகள்

‘விக்கி’யை ஓரங்கட்டி ‘ரணில்’ சாதிக்க நினைப்பது என்ன?

ரணில் விக்கிரமசிங்கவை பற்றி இந்நாட்டு  தமிழர்கள் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து பார்க்கும் காலம் இப்போது வந்து விட்டது. “மீண்டும்” என்று ஏன் சொல்கின்றோம் என்றால் தமிழீழ விடுதலை புலிகளின்  பிளவை அடுத்து ஒருமுறை  “ரணில் என்பவர் யார்” என்ற கேள்வி சத்தமாக தமிழ் பரப்பில் எழுப்ப பட்டது.

பிறகு கால ஓட்டத்தில் அந்த கேள்வி கரைந்து மறைந்துவிட்டது. அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டது. தமிழர்களின் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொண்டு ஆய்வு செய்ய?

இன்று அந்த பிரச்சினை மீண்டும் எழுந்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் தமிழர் கொள்கை  பற்றி கடந்த முறை பிரபாகரனும், அன்டன் பாலசிங்கமும் கேள்வி எழுப்பினார்கள். இந்த முறை அதை விக்னேஸ்வரன் எழுப்பியுள்ளார். உண்மையில் பிரபாரகரனை விடவும், பாலசிங்கத்தை விடவும் விக்னேஸ்வரனின் கேள்வி ஆளுமையுள்ளதாக இருக்கின்றது. இதன் காரணம் இரகசியம் அல்ல.

முன்னவர் இருவரும் ஆயுத போராட்ட பரப்பை சார்ந்தவர்கள். எவ்வளவுதான் தமிழீழ விடுதலை புலிகளை தமிழர்கள் மதித்து ஏற்றுக்கொண்டு இருந்தாலும் கூட ஆயுத போராட்டத்தை தமிழர்கள்  முழு மனதுடன் அங்கீகரித்தது கிடையாது. அதுதான் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளே ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப் அமைப்புகளை தமிழரசு  கட்சியில் இருந்த வேறு படுத்தி ஆட்டி வைக்கின்றது.

விக்னேஸ்வரன், இன்று ஜனநாயக அரசியல் பரப்பில் நின்றபடி ரணில் விக்கிரமசிங்கவை தோலுரித்து காட்டி வருகிறார். தனக்கே உரிய பண்பான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் தர்க்க பொருத்தமானவையாக  இருக்கின்றன. ஆகவே பிரபாகரன், பாலசிங்கம் போல் ஆயுத பலம் கொண்டு விக்னேஸ்வரனை நசுக்கி விட ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை முடியாமல் உள்ளது.

ranil-wickramasinghaஉண்மையில்  2013ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டு வருடங்களாக நடந்துவரும் வடமாகாண சபையை, கடந்த ஆட்சி காலத்து தலைவர் மகிந்த ராஜபக்சவால் கூட அசைக்க முடியவில்லை.  அதாவது விக்னேஸ்வரனை சாய்க்க, மகிந்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. விக்கியின் சம்பந்தி வாசுதேவ நாணயக்காராவை கொண்டுகூட அதை செய்விக்க மகிந்த முயன்றார்.

இவை ரணிலுக்கு தெரியாத விடயங்கள் அல்ல. உண்மையில் விக்னேஸ்வரன் அரசியலில் ரணிலை விட அனுபவம் குறைந்தவர். பதவியிலும் குறைந்தவர். இந்நிலையில் அனுபவசாலியான ரணில் ஏன் விக்னேஸ்வரனுடன் வீம்பாக மோதுகிறார் என்பதன் பின்னணி இன்னமும் புரியா புதிராகவே  .இருக்கின்றது.

ரணில் பகிரங்கமாக சொன்ன முதல் காரணம்.

மாகாணசபையில் “இன ஒழிப்பு” தீர்மானம் கொண்டு வந்துவிட்டார். ஆகவே அதை நான் ஏற்றுக்கொள்ள போவது இல்லை. இதுபோன்ற ரணிலின் கருத்துகள் செல்லுபடியாகவில்லை. அவரைவிட அதிக பொறுப்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதை ஒரு காரணமாக கொண்டு விக்னேஸ்வரனுடன் பகைமை பாராட்டவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டாம் நாள்  கொழும்பில் சிறிசேனவை விக்கி சந்தித்து பேசினார். சந்திரிக்கா அம்மையாரும் சண்டை போடவில்லை. ஹெல உறுமயகாரர்கள் கூட ஆட்சேபித்து விட்டு பிறகு அதை மறந்து விட்டார்கள். ஆனால், ரணில் மாத்திரம் பகைமை பாராட்டுவது வியப்பாக உள்ளது.

தனது மாகாணசபை தீர்மானம் பற்றியும், அது இன்று கொண்டு வரப்பட்ட சூழ்நிலை பற்றியும் விக்னேஸ்வரன் அளித்துள்ள விளக்கத்தை மைத்திரியும், சந்திரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்  என்றே தோன்றுகிறது.

இரண்டாம் காரணம்.

இதை சொன்னவர் வேறு யாரும் அல்ல. அமைச்சர் ராஜித சேனாரத்ன. மகிந்த  பூச்சாண்டி காட்டுகிறாரே, தவிர இனி  நேரடி அரசியலுக்கு வர மாட்டார். ஆகவே அவர் விட்டு சென்ற “சிங்கள பெளத்த” இடத்தை நிரப்ப  இப்போது ரணில் முயற்சி செய்கிறார். இது நடக்கின்ற காரியமா? சிங்களவர்கள்  ஒருபோதும் ரணிலை ஏற்றுக்கொள்ள போவது இல்லை. இவர் இந்த முயற்சி செய்து கொஞ்சம் எஞ்சி இருக்கும் சிறுபான்மை ஆதரவையும் இழக்க போகின்றார். சிங்கள பெளத்த இடம் காலி என்றால் அதை நிரப்ப சம்பிக்க,  பொன்சேகா ஆகிய இருவரும்  இருக்கின்றார்கள். எதிர்வரும் தேர்தலில் இவர்கள் இருவரும்  கொழும்பில்தான் போட்டியிடபோகின்றார்கள். அப்போது ரணிலுக்கு இது தெரிய வரும்.

மூன்றாம் காரணம்.

இதுவும் சொல்லப்படுகிறது. தமிழர்களின் மீது ரணிலுக்கு ஒரு தீரா பகைமை உணர்வு மனதுக்கு உள்ளே  ஏற்பட்டு விட்டது. 2005ம் வருட ஜனாதிபதி தேர்தலில்,  தனக்கு உரித்தான ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்வதை தடுத்த புலிகள் போட்ட தடை இன்று உலகறிந்த விடயம். அதேபோல் 2015ம் வருட ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட கடைசி நிமிடம் வரை இருந்ததை, தடை போட்டு நிறுத்தியவர், சம்பந்தன் என்ற தமிழர்.  வேட்பாளராக மைத்திரியை போட்டியிட போட்ட  திட்டத்துக்கு ரணிலை ஒப்புக்கொள்ள  சந்திரிக்கா பயன்படுத்திய கடைசி ஆயுதம் தன் நண்பர் சம்பந்தன் என்பதும் இன்று உலகறிந்த விடயம்.

cv.wஆகவே தனக்கு தொடர்சியாக ஜனாதிபதி பதவியை பெறுவதற்கு தடையாக இருந்துவிட்ட தமிழர்களுக்கு எதிராக ரணிலுக்கு மனதுக்குள் ஒரு காரம்  குடிகொண்டு விட்டது என அரசியல் ஆய்வுகளை நடத்தும்  கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொல்லுகிறார்.

வடக்குக்கு செல்ல எனக்கு எவரது அனுமதியும் தேவையில்லை. யாழ்ப்பாணத்துக்கு போகும் நான் அவரை சந்திக்க மாட்டேன். அவர்  மன்னிப்பு  கேட்கும் வரை அவரை நான் சந்திக்க .உடன்பட மாட்டேன். நான் பிரதமர் ஆன பின்னர் அவர் என்னை சந்திக்கவே இல்லை. விக்கி பொய் சொல்கிறார்.  அவர் ஒரு இனவாதி. அவரது தீர்மானம் ஒரு இனவாத தீர்மானம். ஐநா விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது விக்கியின் கன்னத்தில் விழுந்த அறை என்றெல்லாம் சொல்லி  சிறுபிள்ளை போல் ரணில் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இவை பிரதமர் ரணில், முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்பில் கொட்டியுள்ள வார்த்தைகள். கொட்டிய வார்த்தைகளை  இப்போது பொறுக்க முடியுமா?  அதுவும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி பதவியில் இருப்பவர், தனது பதவிக்கான பண்பையும் மறந்துவிட்டு இப்படி பேசியுள்ளது பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில்  ரணிலின் இந்த அடாத்தான மகா கோபம் ஏன் என்பதற்கு விடை தேட வேண்டியுள்ளது. ஒருவேளை அது கூட்டமைப்பில் உள்ள ரணிலின் நண்பர் சுமந்திரனுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். ஆனால், சர்ச்சைக்குரிய ரணிலின் வடபகுதி விஜயத்தின் போது சுமந்திரன் நாட்டில் இருக்கவில்லை.

பொதுவாகவே ரணில், அறிவுள்ள தமிழர்கள், தமிழ் தலைவர்களாக  தமிழ் மக்களுக்கு வழி காட்டுவதை விரும்புவதில்லை. இது எல்லா சிங்கள தலைவர்களுக்கும் பொருந்தும்.  ஆனால், இப்போது ரணிலுக்கு இது  ரொம்பவும் பொருந்துகிறது. தமிழர்கள் ஐக்கிய தேசிய கட்சியை அண்டி வாழவேண்டும் என்பதுவே ரணிலின் கொள்கை. ஆகவே தனது கட்சியை வடபகுதியில் வளர்க்க விரும்புகிறார். அது ஒன்றும் தப்பான காரியம் அல்ல. விஜயகலா மகேஸ்வரன், சுவாமிநாதன், ரோசி சேனநாயக்க போன்றோரை அழைத்துக்கொண்டு அவர் வடக்குக்கு விஜயம் செய்தது இந்த நோக்கில்தான் என்று அவதானிகள் சொல்கிறார்கள். இதிலும் தப்பில்லை.

ஆனால், அங்கே போகும் முன் ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொண்டு வடக்கின் மக்களது ஆணையை பெற்ற   முதல்வரை மிகவும் மோசமாக திட்டி விட்டு  அங்கு போனது தப்பு. இதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியை  வடபகுதியில் வளர்க்க முடியாது. இப்போதே ஐதேக  வடக்கில் குற்றுயிராக இருக்கின்றது. விஜயகலா மகேஸ்வரனும், சுவாமிநாதனும் இன்னொரு முறை ரணிலை வடக்குக்கு அழைத்து போனால் போதும், ஐதேகவை குழி தோண்டி புதைத்து அங்கே சமாதி கட்டிவிடலாம் என்று ஒரு பிரபலமான வடமாகாணசபை உறுப்பினர் நேற்று சொன்னார்.

நாட்டின் பிரதமர் ஒரு மாகாணத்துக்கு அதிகாரபூர்வமாக செல்லும் போது அந்த பிராந்தியத்தின்  அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி  மக்கள் பிரச்சினைகளுக்கு  தீர்வை தேடுவது அரசியல் நாகரீகம். அந்த நாகரீகம் பொதுவாக  இலங்கையில் இல்லை.  மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே சொந்த கட்சியாக இருந்தால் அது நடக்கும். வெவ்வேறு கட்சி என்று சொல்லும்போது அது இங்கே நடப்பதில்லை.

இந்தியாவில் பிஜேபி பிரதமர் தமிழகத்துக்கு வந்தால், தமிழக  அதிமுக முதல்வர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பார். அந்த வேளையில் பிரதமரின் பிஜேபி கட்சிக்காரர்களும் அங்கு இருப்பார்கள். ஆனால், பிரதமரை முதலில் வரவேற்பது அதிமுக முதல்வர்தான். . இதன்காரணமாக பிரதமரின் விஜயம் தொடர்பில் மாநில முதல்வரின் அலுவலகத்துக்கு  பிரதமரின்  செயலாளர் முதலில் அறிவிப்பார். அதுதான் மரபு.

இங்கே அப்படி  எதுவும் நடக்கவில்லை என்பதை முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துக்கொண்ட கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக  கூறி விட்டார். இது பிரதமர் அலுவலகத்தின் முறையற்ற செயல்.

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டி மோதியது போன்று  இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.   அதையும் முதல்வர் கூறியுள்ளார். வடக்கு விஜயம் பற்றி அறிவிக்காதது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு  வைபவத்துக்கு  வரும்படி இங்கிருந்து போன துணை அமைச்சர் ரோசி சேனநாயக்க, அழைப்பிதழை வைத்துக்கொண்டு முதல்வரை தொலைபேசியில் அழைத்துள்ளார். இது ஒரு அவமானகரமான செயல்.

இதையெல்லாம் கேட்ட அமைச்சர் ராஜித மிகவும் மனம் நொந்து போயுள்ளார். மாற்று கட்சிகளாக இருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கூட்டணியாக பிரச்சாரம் செய்து ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். இன்று மைத்திரி பதவியில் இருப்பதற்கு தமிழ் வாக்குகள் எவ்வளவு தூரம் காரணம் என்று தோற்றுப்போன மகிந்தவுக்கு தெரியும். மைத்திரி வெற்றி பெற்ற காரணத்தால்தான், இன்று  ரணிலும் பிரதமர் பதவியில்  இருக்கின்றார்.

இது தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானம் அல்ல. தன்னை தெரிவு செய்துள்ள, தான் கேட்டுக்கொண்டபடி  அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்த தமிழ்  மக்களுக்கு நேர்ந்த அவமானம் என்று முதல்வர் நினைப்பது தெரிகிறது.

இதையெல்லாம் விட இன்னொரு பாராதூரமான விடயத்தையும் முதல்வர் கூறியுள்ளார். தன்னையும், மாகாணசபை உறுப்பினர்களையும் சந்திக்க மறுத்த ரணில்  கூட்டமைப்பு எம்பீக்களை சந்தித்துள்ளார். எம்பீக்களும் பிரதமரை சந்தித்துள்ளனர். மாவை, சுரேஷ்,  சரவணபவன், சிவசக்தி, வினோ, விநாயகமூர்த்தி, செல்வம்  ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை கண்டு  குலுக்கியுள்ளனர். ஆனால், “ஏன் நீங்கள் எங்கள்  முதல்வரை சந்திக்க வில்லை?” என்று எவரும் ரணிலிடம் கேட்கவில்லை. இது முதல்வரை மிகவும் மனம் நொந்து போக செய்துள்ளது.

ஆக, கிளிநொச்சி எம்பி சிறிதரன் மட்டுமே, “எங்கள் முதல்வரை மதிக்காத பிரதமரை நான் சந்திக்க மாட்டேன்” என்று பகிரங்கமாக கூறியுள்ளார். புலிகளை பிரித்துவிட்டதாக சொல்லப்படும் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூட்டமைப்பையும் பிரிக்க  திட்டம் போடுகின்றார் என்ற செய்தி வடக்கில் கிளம்பியுள்ளது. முதல்வரை சந்திக்காத பிரதமரை சந்திக்க கூடாது என கூட்டமைப்பு தலைவர் தமக்கு கூறவில்லையே என சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. இதைவிட பெரிய விடயங்கள் பற்றியெல்லாம் விளக்கம் கொடுக்கும் சுரேஷுக்கு இத்தகைய  சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துக்கொள்ள  வேண்டும் என்பது தெரியாமல் போனது ஆச்சரியம்.

எனினும் அவர் இந்த சமாதானத்தையாவது  சொல்லியுள்ளார். ரணிலை சந்தித்த ஏனையவர்கள் எதுவும் சொல்லவில்லை. கூட்டமைப்பு தலைவரும்  இது  வேறு ஏதோ ஒரு  நாட்டில் பிறிதொரு கட்சியில் நடைபெற்றுள்ள சம்பவம் மாதிரியும்,  தனக்கு இதில் எந்த ஒரு  பொறுப்பும் இல்லை என்பது மாதிரியும், ஒன்றும் தெரியாதது போன்று அமைதி காப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதுவும் முதல்வரை மிகவும் மனம் நோக செய்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் வட்டாரத்தில் மிகவும்  வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் கிளம்பியுள்ளது.

இந்த கட்சிகளை பிரிக்கும் வேலைகளை, ரணில்  ஒரு முழுநேர  தொழிலாகவே செய்கின்றாறோ என்ற  சந்தேகம் இப்போது   நாடு முழுக்கவும் கிளம்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல், அவருக்கு இரகசிய ஆதரவை வழங்கி, அதன்மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்த ஐதேக தலைமை முயற்சி செய்கிறது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமீபத்தில் ஏசியன் மிரர் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் ரணில் விக்கிரமசங்கவை குறிப்பிட்டு கூறியுள்ளார்.  முன்பு புலிகள் இயக்கம். தற்போது கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் என்று ரணிலின் பட்டியல் நீளுகின்றது.

தற்போது பிரதமரின் நேரடி கண்காணிப்பில்  வடக்கு மாகாணத்துக்கு என ஒரு விசேட அதிகாரியை நியமிக்க போவதாக ரணில் கூறியுள்ளார். வடமாகாணசபையுடன்  இணைந்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அது வரவேற்கதக்கதாக இருந்திருக்கும். ஆனால், தன்னிச்சையாக  வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு,  “திவி நெகும” சட்டமூலத்தை  கொண்டு வந்து மாகாணசபை  அதிகாரங்களில் தலையிட முயன்ற  பசில் ராஜபக்சவின் முயற்சியை  போன்ற ஒரு முயற்சியா? என பலத்த சந்தேகம் வடமாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆளுநர் சந்திரசிறி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரனின் நிர்வாகத்துக்கு சமாந்திரமாக இன்னொரு நிர்வாகத்தை நடத்தி வந்தார். இது ஒரு பாராதூரமான நிர்வாக பிரச்சனையாக இருந்தது மட்டுமல்ல, அதிகார பகிர்வு என்ற 13ம் திருத்தத்தையே கேலிக்கூத்தாக்கியது. இத்தகைய ஒரு முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க இறங்கியுள்ளாறோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது உண்மையாக இருக்குமானால், ஐக்கிய தேசிய கட்சியும், ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல்ரீதியாக எதிர்வரும் தேர்தலில் பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்பதில் சந்தேகமில்லை.

உலகநாயகன்

(ஞாயிறு தினக்குரல்)