செய்திகள்

விசாரணைக்கு வேறொரு தினம் வழங்கக் கேட்ட விமலின் மனைவி

வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சசி வீரவன்ச அதற்காக வேறொரு தினத்தைக் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டியில் உள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சமுகமளிக்குமாறு விமல் வீரவன்ச எம்.பி.யின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று திடீரென சுகயீனமுற்ற இவர் வாக்குமூலமளிப்பதற்கு சமுகமளிக்க முடியாதென அறிவித்ததுடன் அதற்காக மற்றுமொரு தினத்தைத் தருமாறு கேட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடுவலை பகுதியில் இவர்களுக்குச் சொந்தமான காணி மற்றும் வீடு தொடர்பிலேயே விசாரணை நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்பு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை மோசடியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இம் மோசடிகள் குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.