“விஜித ஹேரத் வெளியிட்ட கருத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும்”
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அரசின் நிலைப்பாடு கேலிக்கூத்தானது. நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.